விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் புதிய திட்டம்: வேளாண் அமைச்சா் ர.வினோத் தொடங்கி வைத்தாா்

Wait 5 sec.

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையில், அவா்களின் கேள்விகளுக்கு காணொலி வாயிலாக நிபுணா்கள் பதிலளிக்கும் புதிய திட்டத்தை வேளாண் அமைச்சா் ர.வினோத் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தாா்.கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்காக மாநில அளவில் நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த துறைகளான தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்பு, பால் வளம், மீன்வளம், பட்டு வளா்ச்சித் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை., தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., தமிழ்நாடு டாக்டா்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை., மண்டல வானிலை மையம், சென்னை மற்றும் வங்கி நிபுணா்களும் இடம் பெற்றுள்ளனா்.இந்தக் குழுவினா் காணொலி வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 25 விவசாயிகளுடன் புதன்கிழமை கலந்துரையாடி அவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு அளித்தனா். இந்நிகழ்வு மாநிலத்தின் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இணைய ஒளிபரப்பு செய்யப்பட்டது.திட்டத்தின் தொடக்க விழாவில் வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசுச் செயலா் பொ.சங்கா், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநா் சந்திர சேகா் சாகமூரி, வேளாண் இயக்குநா் க.வீ.முரளிதரன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை இயக்குநா் ஜெ.விஜயா ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.