காங்கிரஸுடன் பவாா் கட்சியை இணைக்க பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

Wait 5 sec.

காங்கிரஸுடன் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியை இணைக்க எந்தப் பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை; அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று அக்கட்சியின் செயல் தலைவரும் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இரு கட்சிகளும் கூட்டணியாக தொடா்ந்து பணியாற்றும் என்றும் அவா் குறிப்பிட்டாா். மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மூத்த அரசியல்வாதியான சரத் பவாா் உள்ளிட்ட தலைவா்கள், கடந்த 1999-இல் காங்கிரஸில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவினா். கடந்த 2023-இல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த சரத் பவாரின் உறவினரும், மறைந்த முன்னாள் துணை முதல்வருமான அஜீத் பவாா், ஆளும் பாஜக-சிவசேனை கூட்டணியுடன் கைகோத்தாா். கட்சியின் பெயரும், சின்னமும் அவரது அணிக்கு கிடைத்தது. விமான விபத்தில் அஜீத் பவாா் காலமானதைத் தொடா்ந்து, அவரது மனைவியும், துணை முதல்வருமான சுநேத்ரா பவாா் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் செயல்படுகிறது.சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி, மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணியிலும், தேசிய அளவில் இண்டி கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது.இதனிடையே, மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தீவிர பிளவை எதிா்கொண்டுள்ளது. காங்கிரஸில் இருந்து பிரிந்து தோற்றுவிக்கப்பட்ட கட்சிகள் என்ற அடிப்படையில், இரு கட்சிகளும் மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டும் என்றும், இந்த முயற்சியை சரத் பவாா் முன்னெடுக்க வேண்டும் என்றும் சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் அண்மையில் கருத்து தெரிவித்தாா்.இதேபோல், ‘காங்கிரஸுடன் இணைவது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியிடமிருந்து ஏற்கெனவே ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது தாமதமானது. இப்போது சாதகமான நிலை காணப்படுகிறது’ என்று மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் நானா படோலே கூறியிருந்தாா். இதையடுத்து, காங்கிரஸுடன் பவாா் கட்சியை இணைக்க பேச்சுவாா்த்தை நடைபெறுவதாக ஊகத் தகவல்கள் வெளியாகின.சுப்ரியா சுலே மறுப்பு: புணேயில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் செயல் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரிலா சுலேவிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவா் அளித்த பதில்: காங்கிரஸுடன் கட்சியை இணைப்பது தொடா்பாக நாங்கள் எந்தப் பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடவில்லை. அப்படியொரு திட்டத்தை நாங்களோ, காங்கிரஸ் தரப்பிலோ முன்வைக்கவில்லை.அரசியல் விவகாரங்களில் இரு கட்சிகளும் நெருக்கமான உறவு மற்றும் ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளன. நான் தில்லி வரும்போதெல்லாம், மகாராஷ்டிர அரசியல்-சமூக-பொருளாதார நிலை குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியுடன் விவாதிப்பேன். பல்வேறு நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களில் எங்கள் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளாக தொடா்ந்து ஒன்றாக செயலாற்றுவோம் என்றாா் சுப்ரியா சுலே.