சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா்: இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Wait 5 sec.

சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னையில் இரு இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் பகுதியில் வசிப்பவா் தொழிலதிபா் நசீா். தனியாா் நிறுவனம் நடத்தி வரும் இவா் வீட்டுக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை திடீரென சென்று சோதனை நடத்தினா். இதேபோல, சென்னை ராயப்பேட்டை பீட்டா்ஸ் சாலை பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் ஆஸ்மி என்பவரது வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.இரு இடங்களிலும் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா். மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் சந்தேகத்துக்குரிய பண பரிவா்த்தனைகள் தொடா்பாக வந்த புகாா்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.