விரைவில் ஐஆர்சிடிசியின் (IRCTC) புதிய இணையதளத்தின் பீட்டா வெர்ஷன் அறிமுகமாகவிருக்கிறது. இதன் மூலம் மிக விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்வது உள்ளிட்ட 4 மிக முக்கிய மாற்றங்கள் வருகின்றன.இந்திய ரயில்வே விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளத்தின் பீட்டா (beta) பதிப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. டிக்கெட் முன்பதிவை வேகமாகவும் எளிதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட நான்கு முக்கிய மாற்றங்களைப் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.புதிய ஐஆர்சிடிசி இணையதளத்தின் பீட்டா பதிப்பு தயாராகி வருகிறது. கடந்த மாதம் ஜெய்ப்பூரில் உள்ள மால்வியா தேசிய தொழில்நுட்பக் கழகத்திற்கு (MNIT) சென்றிருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாணவர்களுடன் உரையாடியபோது, மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசியின் இணையதளம் ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.தற்போது, எம்என்ஐடி மாணவர்கள், இந்த புதிய இணையதளம் குறித்த விவரங்களை ரயில்வே அதிகாரிகளுக்கு விளக்கியிருக்கிறார்கள். மேலதிகத் தகவல்களையும் கேட்டுப் பெறவிருக்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.முக்கிய மாற்றம் என்ன?டிக்கெட் முன்பதிவு - தேசிய ரயில்வே நிர்வாக தகவல்படி, புதிய இணையதளத்துடன் இந்திய ரயில்வேயின் பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) மென்பொருள் இணைக்கப்பட்டு வருகிறது. எனவே, புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில், டிக்கெட் முன்பதிவு அமைப்பும் மேம்படுத்தப்பட்டு வருவதால், முழுமையான செயல்பாட்டுடன் கூடிய புதிய இணையதளம் இன்னும் ஒரு சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.வேறென்ன மாற்றங்கள்?கேப்ட்சா : பயனர்கள் ஐஆர்சிடிசியின் இணையதளத்துக்குள் சென்றதும், தேவையற்ற பாப்பப்களால் திணறுவதைத் தவிர்க்கும் வகையில், புதிய இணையதளத்தில் தேவையற்ற கேப்ட்சா குறியீடுகள், பாப்-அப்கள் (pop-ups), மின்னும் கிராபிக்ஸ் மற்றும் கவனத்தைச் சிதறடிக்கும் பிற அம்சங்கள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்பட்டுவிடும்.ரயில் இருக்கை விவரம் - ஒரு ரயிலில் இருக்கை வசதியை தேடும் பயனருக்கு, அனைத்து வகையான பெட்டிகளில் இருக்கும் இருக்கை விவரங்களும் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.மிக விரைவான முன்பதிவு - மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளத்தில், டிக்கெட் முன்பதிவை நிறைவு செய்ய பல்வேறு படிநிலைகளை பூர்த்தி செய்யத் தேவையில்லை. ஒரு சில நிலைகளை பூர்த்தி செய்தாலே முன்பதிவு முடியும் வகையில் மாற்றம் வருகிறது.விவர சேமிப்பு வசதி - ஒரு முறை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளின் விவரங்கள் சேமித்து வைத்து மீண்டும் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயன்படுத்தும் வசதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.24 ஆண்டுகள்... இந்திய ரயில்வேயின் இணையவழி டிக்கெட் முன்பதிவு சேவை 2002-ல் தொடங்கப்பட்டு தற்போது வரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. நாட்டின் மொத்த ரயில் டிக்கெட் முன்பதிவுத் தேவையில் சுமார் 88 சதவிகிதம் இணையதளம் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.