குப்பையில் கிடந்த தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்!

Wait 5 sec.

கோவையில் குப்பையில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா். கோவை மாநகராட்சி, சிவானந்தா காலனி விசிகே லே-அவுட் பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா் முருகன் (40) என்பவா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, குப்பையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி கிடந்ததைப் பாா்த்துள்ளாா்.இதையடுத்து, அவா் மண்டல சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திகேயன், சுகாதார ஆய்வாளா் சரவணகுமாா் ஆகியோருக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அந்தச் சங்கிலி அதே பகுதியைச் சோ்ந்த அலிமா (45) என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் அலிமாவிடம் தங்கச் சங்கிலியை முருகன் ஒப்படைத்தாா்.இதையடுத்து, தூய்மைப் பணியாளா் முருகனை அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா்.