கல்விக் கட்டண விவரங்களை பள்ளிகளின் அறிவிப்புப் பலகையிலும், இணையதளத்திலும் தனியார் பள்ளிகள் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவுக்கு ஒரு காரணம் இருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டண விவரங்களை அளிக்குமாறு கோவையைச் சேர்ந்த எம்.லியாகத் அலி, மாவட்ட கல்வி அலுவலகத்தில் கடந்த 2022-இல் மனு அளித்தார். மூன்று ஆண்டுகள் கடந்தும் அவருக்கு முழுமையான தகவல்கள் அளிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மனுவை அண்மையில் விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். மனுதாரரை அலைக்கழித்ததற்காக தங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), அவரது நேர்முக உதவியாளர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பில், கட்டண விவரங்களை ஜூன் 5-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும்படியும் தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தார்.தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் ஒருசில பள்ளிகள் மட்டும்தான் கட்டண விவரங்களை வெளியிட்டன. மாநில தகவல் ஆணையத்தின் வரம்புக்குள் தனியார் பள்ளிகள் வராது என்பதால், இந்த உத்தரவு பள்ளிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று கூறி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கப் பொதுச்செயலர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.இந்த வழக்கில்தான் கடந்த புதன்கிழமை (ஜூலை 8) தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மாநில தகவல் ஆணையத்தின் வரம்புக்குள் தனியார் பள்ளிகள் வராது என்பதை நீதிபதி எம்.தண்டபாணி ஏற்றுக் கொண்டாலும் அரசமைப்புச் சட்டம் பிரிவு 226 வழங்கி உள்ள சிறப்பு அதிகாரத்தின்படி, கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.நாடு தழுவிய அளவில் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதைவிட தனியார் பள்ளிகளை பெற்றோர்கள் நாடும் போக்கு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு சில நாள்களுக்கு முன்னர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2025-26-ஆம் ஆண்டில் 43.03 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 2.07 லட்சம் குறைவாகும். இதற்கு மாறாக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முந்தைய ஆண்டைவிட 1.77 லட்சம் அதிகரித்து 62.03 லட்சமாக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை 2022-23-இல் 39.1 சதவீதமாக இருந்தது 2025-26-இல் 34.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை 44 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்திலும் கடந்த 2023-24-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025-26-இல் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 5.9 லட்சம் குறைந்துள்ளது.தனியார் பள்ளிகளில் படிப்பது தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்லது என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். அதற்கு தனியார் பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருப்பதும் ஹிந்தி கற்றுக் கொடுக்கும் மும்மொழிக் கொள்கை இருப்பதும் முக்கியமான காரணங்கள். அதனால், பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் அடித்தட்டு மக்களும்கூட தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.இதைக் கருத்தில் கொண்டுதான் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் குறைந்த வருவாய் பிரிவினருக்காக ஒதுக்கப்படுகின்றன. ஆனால், அந்த வாய்ப்பை உயர் வருவாய்ப் பிரிவினர் வட்டாட்சியரிடமிருந்து போலிச் சான்றிதழைப் பெற்று பயன்படுத்திக் கொள்வதை தனியார் பள்ளிகள் மெüனமாக ஆதரிக்கின்றனவே தவிர தடுக்க முயற்சிப்பதில்லை.பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஒரு சில பள்ளிகளில் எல்கேஜி படிப்புக்கே கணக்கில் காட்டாமல் லட்சக்கணக்கில் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் கற்பித்தல் கட்டணத்துக்கு மட்டும் ரசீது தரப்படுகிறது. சீருடை, காலணிகள் போன்றவற்றை தாங்கள் குறிப்பிடும் கடையிலேயே பெற்றோர்கள் வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.இதுதவிர நோட்டு புத்தகங்கள், விளையாட்டுப் பயிற்சி, நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி, கலாசார நிகழ்ச்சிகள், கல்விச் சுற்றுலா, கராத்தே, இசை போன்ற தனித்திறன் பயிற்சிகள் போன்றவற்றுக்கும் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கல்விச் சேவை என்பது மிகப் பெரியத் தொண்டாகக் கருதப்பட்டு தனவந்தர்கள் தங்களுடைய சொத்தை எழுதி வைத்து, கல்விச் சாலைகளை நிறுவி, இலவச கல்வி வழங்கிய காலம் மறைந்துவிட்டது. இப்போது தரமான கல்வி வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே என்பது நடைமுறையாக மாறிவிட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவது ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை தனியார் பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறையும் குறைந்தபட்சம் உறுதி செய்ய வேண்டும்.