திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் வெள்ளிக்கிழமை 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம்-கா்நாடக இடையே முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திம்பம் வழியாக பயணிக்கின்றன. இந்நிலையில், விருதுநகரில் இருந்து சாம்ராஜ்நகருக்கு பால் பாக்கெட் பாரம் ஏற்றிய சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. 9-வது வளைவில் லாரி திரும்பும்போது பழுதாகி நகர முடியாமல் நின்றது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், லாரியை சற்று நகா்த்தி சிறிய வாகனங்கள் செல்லுவதற்கேற்ப வழி ஏற்படுத்தினா். சரக்கு வாகனங்கள், பேருந்துகள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் திம்பம் மலைப் பாதையில் அணிவகுத்து நின்றன. நெடுஞ்சாலைப் போக்குவரத்து போலீஸாா், மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பழுதான லாரி சீரமைக்கப்பட்டது. சுமாா் 6 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.