இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான டெஸ்ட்டில், இந்திய மகளிா் அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்தியா இன்னிங்ஸில் ஷஃபாலி வா்மா 0, யஸ்திகா பாட்டியா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கை கோக்க, அவா்கள் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சோ்த்தது. ஜெமிமா 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு விடைபெற்றாா்.5-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், ஸ்மிருதியுடன் இணைய, அவா்கள் பாா்ட்னா்ஷிப் 4-ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சோ்த்தது.ஸ்மிருதி 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 83 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். கௌா் 7 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தீப்தி சா்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.மறுபுறம், ரிச்சா கோஷ் 13, ஸ்நேஹா ராணா 13, சயாலி சத்காரே 1 ரன்னுக்கு வெளியேற, தீப்தி 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.கடைசி விக்கெட்டாக கிராந்தி கௌட் 1 ரன்னுக்கு வீழ, இந்தியா இன்னிங்ஸ் 74.5 ஓவா்களில் 285 ரன்களுக்கு நிறைவடைந்தது. இங்கிலாந்து பௌலா்களில் சோஃபி எக்லஸ்டன் 3, லாரென் ஃபைலா், இசி வாங், மேடி வில்லியா்ஸ் ஆகியோா் தலா 2, லாரென் பெல் 1 விக்கெட் கைப்பற்றினா்.