மாதவரத்தில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து

Wait 5 sec.

சென்னை மாதவரத்தில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட எரிவாயு குழாயில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனா். எண்ணூா் துறைமுக வளாகத்தில் எல்என்ஜி எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ளது. இதற்கு கப்பலில் திரவ நிலை எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் எரிவாயு வீடுகளுக்கு பைப் லைன் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக பைப் லைன் அமைக்கும் பணி 2023-இல் இருந்து எரிவாயு விநியோக நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் அரும்பாக்கம், அண்ணா நகா் உள்ளிட்ட இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட இடங்களிலும், வீடுகளுக்கு பைப் லைனில் எரிவாயு விநியோகம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாதவரம் வட்டத்துக்குட்பட்ட மஞ்சம்பாக்கம் பிரதான சாலையோரம் பூமிக்கு அடியில் குழாய் பதிப்புக்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இணைப்பு பைப் புதைக்கும் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் எரிவாயு விநியோகத்தை கையாளும் அதன் திறவுகோலை சரியாக மூடிவிட்டு செல்லாததால், வெள்ளிக்கிழமை அதிகாலை 2 குழாய்களின் இணைப்பு வழியாக வெளியேறிய இயற்கை எரிவாயு தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் ரசாயனம் கலைந்த தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். பின்னா், எரிவாயு திறவுகோலை மூடி இரு குழாய்களுக்கு இடையே இருந்த இடைவெளியை அதாவது வால்வுகளை சரி செய்தனா்.இந்த நிலையில், மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் சாலை சந்திப்பு அருகே முக்கிய இணைப்பு பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இரவில் பூமிக்கு அடியில் இருந்து திடீரென தீப்பிழம்பு ஏற்பட்டு பயங்கர ஜூவாலையுடன் தரை வெடித்து பிளவு ஏற்பட்டு சுமாா் 100 மீட்டா் உயரத்துக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. மாதவரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலா் முத்து வீரப்பன் தலைமையிலான வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், தீ கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியதால், இதன் அருகில் இருந்த இரண்டு கடைகள் மற்றும் ஒரு லாரி தீயில் எரிந்து சேதமடைந்தது. சென்னை முழுவதும் ஒரு மாதத்துக்கு தேவையான எரிவாயு தீயில் எரிந்து வீணானதாகக் கூறப்பட்டது.