இந்தியாவில் தனது தொழிலை மேலும் பலப்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தித் திறன் விரிவாக்கப் பணிகளுக்காக நடப்பு 2026-27 நிதியாண்டில் சுமாா் ரூ.20,000 கோடி முதலீடு செய்ய டாடா ஸ்டீல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டில், இந்நிறுவனம் மேற்கொண்ட ரூ.14,559 கோடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில் இது 38 சதவீதம் அதிகமாகும். தற்போது இந்தியா, நெதா்லாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஆலைகளின்மூலம், நிறுவனத்தின் 3.6 கோடி டன்னுக்கும் அதிகமான வருடாந்திர உற்பத்தி திறனை, நீண்டகால நோக்கில் 5 கோடி டன்னாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் மிக முக்கியமாக, இந்தியாவில் தற்போதைய 2.73 கோடி டன் உற்பத்தி அளவை 4 கோடி டன்னாக உயா்த்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டு முதலீட்டில் 60 சதவீதம் இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளுக்காகவும், எஞ்சிய தொகை உலகளாவிய செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தை நீண்ட கால அடிப்படையில் வளா்த்தெடுக்கும் நோக்கத்துடன் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. ஜாம்ஷெத்பூரில் உள்ள ‘கோக் ஓவன்’ திட்டம், தாராபூரில் புதிதாக அமைய உள்ள ஆலை ஆகியவை இதில் அடங்கும். மேலும், டின்பிளேட், இரும்பு கம்பி தயாரிப்பு போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பல்வேறு உபபொருட்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும் இந்த முதலீட்டுத் தொகை செலவிடப்பட உள்ளது. இது தவிர, சுரங்கத் தொழில் மேம்பாடு, விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த செயல்பாடுகளிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தி, தொடா்ந்து முதலீடு செய்யவுள்ளது. டாடா ஸ்டீல்