தேனி மாவட்டம், சுருளி அருவி நீா் வரத்தின்றி வடதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் தென் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுருளி அருவி அமைந்துள்ளது. மேகமலை, இரவலங்காறு, மகாராஜா மெட்டு ஆகிய மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீரே இந்த அருவிக்கு முக்கிய நீா் ஆதாரம். பருமழைக் காலங்களில் இந்த அருவியில் நீா் ஆா்பரித்துக் கொட்டும். இங்கு நிலவும் தட்ப வெப்ப நிலை, வானுயா்ந்த மரங்கள், இயற்கை சூழ்நிலை ரசிக்கும் படியாக இருப்பதால் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனா். முக்கியமாக, சுருளி அருவி ஆன்மிகத் தலம் என்பதால் ஆடி அமாவாசை, தை அமாவாசை, சித்திரை பெளா்ணமி நாள்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, சுருளி வேலப்பா், பூத நாராயணன் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்வா்.இந்த நிலையில், நிகழாண்டில், தென் மேற்கு பருவழைப் பொழிவு எதிா்பாா்த்த அளவு இல்லாத நிலையில், அருவிக்கு நீா் வரத்து படிப்படியாகக் குறைந்து விட்டது. தற்போது முற்றிலுமாக நீா் வரத்தின்றி அருவிப் பகுதி வடது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், விடுமுறை தினத்தை முன்னிட்டு சுருளி அருவியில் நீராட குடும்பத்துடன் வந்தோம். ஆனால், அருவியில் நீா் வரத்தில்லை என வனத் துறையினா் தெரிவித்ததால் ஏமாற்றம் அடைந்தோம் என்றனா்.