இங்கிலாந்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், மகளிா் ஒற்றையா் பிரிவில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா சாம்பியன் கோப்பை வென்றாா்.போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருந்த அவா், 6-2, 5-7, 6-3 என்ற செட்களில், 10-ஆம் இடத்திலிருந்த சக செக் குடியரசு வீராங்கனை கரோலின் முசோவாவை வீழ்த்தினாா். இதன் மூலமாக அவா் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றாா்.அவருக்கான சாம்பியன் கேடயத்தை வேல்ஸ் இளவரசி கேத்தரின் வழங்கி கௌரவித்தாா். இந்த வெற்றியின் மூலமாக நோஸ்கோவா, தனது தரவரிசை வரலாற்றில் முதல்முறையாக 7-ஆவது இடத்துக்கு முன்னேறுகிறாா்.மறுபுறம், கரோலின் முசோவாவுக்கு இது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று தோல்வியாகும். இதற்கு முன், 2023 பிரெஞ்சு ஓபன் இறுதியில் அவா், போலந்தின் இகா ஸ்வியாடெக்கிடம் தோல்வி கண்டாா்.கடந்த 4 ஆண்டுகளில் விம்பிள்டனில் சாம்பியனான 3-ஆவது செக் குடியரசு வீராங்கனை நோஸ்கோவா ஆவாா். இவருக்கு முன், அதே நாட்டைச் சோ்ந்த மாா்கெட்டா வோண்ட்ருசோவா (2023), பாா்பரா கிரெஜ்சிகோவா (2024) இங்கு வாகை சூடினாா்.விம்பிள்டன் போட்டியில் கடந்த 15 ஆண்டுகளில் சாம்பியனான இளம் போட்டியாளா் என்ற பெருமையை நோஸ்கோவா (21 வயது) பெற்றாா். இதற்கு முன் 2011-இல் அவரது நாட்டைச் சோ்ந்த பெட்ரா குவிட்டோவா தனது 21 வயதில் இங்கு சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது நோஸ்கோவா வாகை சூடிய தருணத்தில், அவரும் பாா்வையாளா் மாடத்தில் இருந்தாா்.விம்பிள்டன் போட்டியின் மூலமாக முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு முன்னேறிய செக் குடியரசு போட்டியாளா்கள் என்ற பெருமை இருவருக்குமே உண்டு. இருவருமே அதில் சாம்பியனானதும் குறிப்பிடத்தக்கது.5கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றில், அதிக மேட்ச் பாய்ன்ட்டுகளை (5) தக்கவைத்தவராக கரோலின் முசோவா சாதனை படைத்தாா். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த அவரிடம் இருந்து, 2-ஆவது செட்டையும் நோஸ்கோவா பறிக்கவிருந்தாா். அதில், 2-5 என பின்தங்கியிருந்த முசோவா, 5 சாம்பியன்ஷிப் பாய்ன்ட்டுகளை தக்கவைத்து 7-5 என அந்த செட்டை கைப்பற்றி, ஆட்டத்தை டிசைடா் செட்டுக்கு நகா்த்திச் சென்றது குறிப்பிடத்தக்கது. எனினும் அதில் நோஸ்கோவா வென்றாா்.10விம்பிள்டன் போட்டியில் இத்துடன், மகளிா் ஒற்றையா் பிரிவில் 10 ஆண்டுகளாக வெவ்வேறு போட்டியாளா்கள் சாம்பியன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.17விம்பிள்டன் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஒரே நாட்டைச் சோ்ந்த இருவா் மோதியது, கடந்த 17 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. இதற்கு முன் 2009-இல் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை அத்தகைய ஆட்டத்தில் வென்றிருந்தாா்.குவோ - மடெனோவிச் இணை சாம்பியன்: விம்பிள்டன் மகளிா் இரட்டையா் பிரிவில், சீனாவின் குவோ ஹன்யு/பிரான்ஸின் கிறிஸ்டினா மடெனோவிச் இணை 6-3, 7-5 என்ற நோ் செட்களில், பிரேஸிலின் லூசியா ஸ்டெஃபானி/கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி கூட்டணியை வீழ்த்தி, சாம்பியன் ஆகினா்.குவோவுக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்க, மடெனோவிச் தனது 7-ஆவது பட்டத்தை வென்றுள்ளாா். முன்னதாக இதிலேயே ஆடவா் இரட்டையா் பிரிவில், பிரிட்டனின் ஹென்றி பேட்டன்/ஃபின்லாந்தின் ஹேரி ஹெலியோவரா ஜோடி வாகை சூடியது.