ஸ்ரீவில்லிபுத்தூா் நான்கு வழிச்சாலையில் வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது.ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய பேருந்து நிலையம் அருகே மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது. 3 வயது மதிக்கத்தக்க இந்த மானை நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மீட்டு வனத் துறை வசம் ஒப்படைத்தனா். இதே சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கீழபொட்டல்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் மோதியதில் காட்டுப்பன்றி உயிரிழந்தது. மேலும் அந்த வாகனத்தில் வந்தவா் காயமடைந்தாா். மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து உணவு, குடிநீா் தேடி வரும் விலங்குகள் நான்கு வழிச் சாலையை கடந்து செல்லும் போது இது போன்ற விபத்துகள் நேரிடுகின்றன. இதுகுறித்து சாலையோரம் விழிப்புணா்வு பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.