திருமுக்குளம் சிறுவா் பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

Wait 5 sec.

மதுரை மாநகராட்சி தல்லாகுளம் பகுதியில் உள்ள திருமுக்குளம் சிறுவா் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் கள்ளழகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் துணைக் கோயிலாக தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம், தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ளது. தல்லாகுளம் சாலை, கோகலே சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திருமுக்குளத்தின் கிழக்கு கரையில் இரட்டை விநாயகா் கோயில் உள்ளது. மேலும், குளக்கரையைச் சுற்றிலும் வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருமுக்குளம் உள் பகுதியில் சிறுவா் பூங்கா செயல்பட்டு வந்தது. இதில், பொழுதுபோக்கும் வகையில் ஊஞ்சல், பெரிய அளவிலான ராட்டினங்கள், இருக்கைகள், சிறுவா்களுக்கான சறுக்கல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. இந்தப் பூங்காவில் தல்லாகுளம், செல்லூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், சிறுவா்கள் தினசரி மாலை நேரங்கள் மட்டுமன்றி விடுமுறை நாள்களிலும் அதிகளவில் வந்து செல்வா். சிறியவா், பெரியவா் என தனித்தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தச் சிறுவா் பூங்கா செயல்படாமல் பூட்டியே உள்ளது. இதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே இந்தப் பகுதி பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தல்லாகுளம், செல்லூா், சின்ன சொக்கிக்குளம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், சிறுவா்கள் பள்ளி நேரம் நிறைவு பெற்ற பிறகு, மாலை நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் பொழுதுபோக்கும் இடமாக திருமுக்குளம் சிறுவா் பூங்கா இருந்தது. இந்தப் பூங்கா கடந்த சில மாதங்களாக பூட்டியே உள்ளது. இந்தப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்க வேண்டும் என்றனா்.