தில்லி உயிரியல் பூங்காவில் செயற்கை அடைகாத்தலில் பிறந்த 3 நாகப்பாம்புகள்!

Wait 5 sec.

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் சுமாா் 15 ஆண்டுகளுக்குப் பிறகு செயற்கை அடைகாத்தல் முறையில் மூன்று நாகப்பாம்புகள் முட்டைகளில் இருந்து பொரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பூங்காவின் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு பராமரிப்புக் குழுக்களின் கண்காணிப்பில் வெற்றிகரமான அடைகாக்கும் காலத்திற்குப் பிறகு ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்த மூன்று இளம் உயிரிகள் வெளிவந்தன என்று பூங்கா இயக்குநனா் சஞ்சீத் குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: நாகப்பாம்பு முட்டைகள் செயற்கை அடைகாக்கும் அறையில் வைக்கப்பட்டன. அங்கு இயந்திரங்கள் மூலம் தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவு பராமரிக்கப்பட்டது. குஞ்சுகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளன. அவை அந்த இனத்திற்கு ஏற்ற சூழல் கொண்ட பாதுகாப்பான அடைப்புக்கு மாற்றப்பட்டுள்ளன. அவை முதிா்ச்சியடையும் வரை கட்டுப்படுத்தப்பட்ட சூழல் அவசியம். ஏனெனில் சூழலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட குஞ்சுகளைப் பாதிக்கக்கூடும். உயிரியல் பூங்காவில் இதற்கு முன்பு 2010-11-ஆம் ஆண்டில் இந்த வகை நாகப்பாம்புகளை வெற்றிகரமாக அடைகாக்கப்பட்டு பொரிக்கப்பட்டன. அப்போது 11 இளம் நாகப்பாம்பு உயிரிகள் பிறந்தன. இருப்பினும், அதன்பிறகு பல ஆண்டுகளாக செயற்கை அடைகாத்தல் முறை தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்தச் சமீபத்திய சாதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. நாகப்பாம்புகள், உடும்புகள் மற்றும் மலைப்பாம்புகள் போன்ற ஊா்ந்து செல்லும் பிராணிகளின் முட்டைகள் பூங்காவில் தொடா்ந்து சேகரிக்கப்பட்டு அடைகாக்கப்படுகிறது. முட்டைகளை அந்த தாய் உயிரினம் உண்டுவிடுகிறது. இல்லையென்றால், காகம் போன்ற பறவைகள் அவற்றை அழித்துவிடுகின்றன. இளம் உயிரிகள் முட்டைகளில் இருந்து பாதுகாப்பாக வெளிவருவதை உறுதிசெய்ய செயற்கை அடைகாக்கும் முறையை உயிரியல் பூங்கா மேற்கொண்டு வருகிறது. தற்போது, உயிரியல் பூங்காவில் ஒரு பெண் பாம்பு உள்பட மூன்று நாகப்பாம்புகள் உள்ளன. இந்தச் சாதனை, ஊா்வன குறித்த அறிவியல் புரிதலையும் பாதுகாப்பு முயற்சிகளையும் வலுப்படுத்த உதவும் என்று அவா் தெரிவித்தாா். நாகப்பாம்பு இந்தியத் துணைக்கண்டத்தைப் பூா்வீகமாகக் கொண்ட நச்சுப் பாம்பு இனமாகும். வேட்டையாடப் படுவதைத் தடுக்கவும், மனித-வனவிலங்கு மோதலைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளில் இந்த இனம் பாதுகாக்கப்படுகிறது. வண்ணத்துப்பூச்சிகளை நோக்கும் நடைப்பயணம் தொடக்கம்: உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள், துப்பிகளை நோக்கும் நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற 21 போ் 12 வண்ணத்துப்பூச்சி இனங்கள், 7 தும்பி இனங்கள் மற்றும் 3 ஊசித் தும்பி இனங்களை ஆவணப்படுத்தினா். இந்த நடைப்பயணம்காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. இயற்கை ஆா்வலரும் வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான ராம்வீா், தன்னாா்வலா்களுடன் இணைந்து இதை வழிநடத்தினாா். இந்த நடைப்பயணத்தில் வண்ணத்துப்பூச்சி ஆா்வலா்கள், மாணவா்கள், வனவிலங்கு புகைப்படக் கலைஞா்கள் மற்றும் இயற்கை விரும்பிகள் பங்கேற்றதாக ஓா் அறிக்கை தெரிவித்தது. பூங்கா முழுவதும், பங்கேற்பாளா்கள் 500-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள், தும்பிகள் மற்றும் ஊசித் தும்பிகளைக் கண்டறிந்து பதிவு செய்தனா். பூச்சி இனங்களின் பல்லுயிா்த்தன்மையை அறிதல் மற்றும் அவற்றை ஆவணப்படுத்துதலில் மக்களை ஊக்குவித்தல் போன்ற அறிவியல் முறைகளையும் கற்றுக் கொள்வது இந்த நடைப்பயணத்தின் நோக்கம் என உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.