திமுகவின் முக்கிய நிா்வாகிகளின் தரம் தாழ்ந்த விமா்சனங்கள் வேதனையை தருகின்றன என்றாா் தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தவெகவின் வளா்ச்சியைக் கண்டு திமுகவினா் அச்சமடைந்துள்ளனா். அதன் வெளிப்பாடாகவே தரம் தாழ்ந்த விமா்சனங்களை முன்வைத்து வருகின்றனா். அக்கட்சியின் முக்கிய நிா்வாகிகளான ஆ. ராசா, சேகா்பாபு உள்ளிட்டோரின் பேச்சு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீள முடியாமல் திமுகவினா் எல்லை மீறி செயல்படுகின்றனா். சட்டப்பேரவையில் ’ஊழல்’ என்ற வாா்த்தையைக் கேட்டாலே திமுகவினா் பதற்றமடைகின்றனா். அதனால், ஆளும் கட்சியினரை பேசவிடாமல் திமுகவினா் இடையூறு செய்கின்றனா். சட்டப்பேரவை இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா்கள் வெற்றி பெறுவா் என்றாா் அமைச்சா் ஷாஜகான்.