செய்யறிவு துறையின் வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி தெரிவித்துள்ளார்.இந்த கருத்தை ஏற்பதாக உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களான ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் மற்றும் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாள்களாக செய்யறிவு துறையின் அதிவேக வளர்ச்சியும் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றியும் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களின் தலைவர்களே ஏஐ வளர்ச்சியின் விளைவுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.”தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்” என்ற தலைப்பில் ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:“செய்யறிவு துறையின் வேகத்தை ஏன் மட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்தும், அதற்கான மூன்று கட்டத் திட்டம் குறித்தும் நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். இந்த திட்டங்களின் முதல் கட்ட நடவடிக்கையைச் செயல்படுத்த 'ஆந்த்ரோபிக்' (Anthropic) நிறுவனம் தன்னிச்சையாக முன்வந்துள்ளது. இதற்காக, எங்கள் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும், ஏதேனும் தவறுகள் நடந்தால் அதுகுறித்து அறிக்கை அளிக்கவும் மற்றும் சோதனையின் போது மாதிரிகள் சரியான இலக்குடன் செயல்படுகின்றனவா என்பதை மதிப்பிடவும், மூன்றாம் தரப்பு மதிப்பீட்டாளர்களுக்கு எங்கள் அமைப்புகளை அணுகும் நிரந்தரமான மற்றும் ஊழியர்களுக்கு இணையான அனுமதியை நாங்கள் வழங்கவுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.அந்த கட்டுரையிலிருந்து சில பத்திகள்...“மனித வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆற்றல் செய்யறிவுக்கு உண்டு என்று நான் நம்புவதால், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி வருகிறேன். இதன் மகத்தான நன்மைகள் குறித்து நான் பலமுறை எழுதியுள்ளேன். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான முக்கிய நோய்களுக்குத் தீர்வு காணவும், பொருளாதார வளர்ச்சியை வெகுவாக விரைவுபடுத்தவும், வளமும் அதிகாரமளித்தலும் நிறைந்த ஒரு உலகை உருவாக்கவும், அத்துடன் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் செய்யறிவால் முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதன் அவசியத்தை நான் தனிப்பட்ட முறையிலும் உணர்ந்துள்ளேன். என் தந்தை ஒரு நோயால் உயிரிழந்தார். ஆனால் அவர் இறந்த சில ஆண்டுகளிலேயே அந்த நோய்க்கான தீர்வு கண்டறியப்பட்டது. அதேபோல, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு குணப்படுத்த முடியாததாக இருந்த புற்றுநோயின் ஆரம்பக்கட்ட நிலையிலிருந்து நானும் மீண்டு வந்துள்ளேன். முறையாகவும் கவனமாகவும் கையாளப்பட்டால், மனிதகுலத்தை மேம்படுத்தி மேன்மைப்படுத்திய தொழில்நுட்ப அதிசயங்களின் வரிசையில் செய்யறிவும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.ஆனால் முந்தைய பல தொழில்நுட்பங்களைப் போலவே, செய்யறிவும் ஆபத்துகள் நிறைந்தது, மேலும் இது மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பம் என்பதால், இதன் அபாயங்கள் தீவிரமானவை. செய்யறிவு தனது கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம், சைபர் தாக்குதல்கள் மற்றும் உயிரி பயங்கரவாதத்திற்கு செய்யறிவை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் கடுமையான பொருளாதார சீர்குலைவு ஆகியவை அடங்கும்.எனது இணை நிறுவனர்கள் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து, செய்யறிவின் ஆபத்து மற்றும் பலன்களின் இரட்டைத்தன்மையுடன் போராடி வருகிறேன். தொழில்நுட்பத்தை உருவாக்காமல் இருப்பது மனிதகுலத்துக்கான நன்மைகளை இழக்கிறது. அதே நேரத்தில் அதை மிக வேகமாக உருவாக்குவது பொறுப்பற்றது. நாங்கள் ஒரு நடுத்தர வழியைத் தேடுகிறோம். வேகத்தை விட எச்சரிக்கையையும் லாபத்தை விட விவேகத்தையும் முதன்மைப்படுத்த முயற்சித்தோம்.ஆனால் கடந்த சில மாதங்களாக, அபாயங்களை முழுமையாக நிவர்த்தி செய்வதற்கு இன்னும் அதிக விவேகம் தேவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏஐ மாடல்களின் திறன்களை மேம்படுத்தும் வேகத்தை நாம் மட்டுப்படுத்த வேண்டும்” என்று டாரியோ அமோடி குறிப்பிட்டுள்ளார்.டாரியோ அமோடியின் பதிவைப் பகிர்ந்துள்ள ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன்,“செய்யறிவு வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்ற டாரியோவின் கருத்தை நான் ஏற்கிறேன். சமீபகாலமாக ஓபன் ஏஐ-யில் நடைபெற்ற விவாதங்களில் இதுவே முக்கியப் பேசுபொருளாக இருந்து வருகிறது.நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இணையான அணுகல் வசதியைக் கொண்ட சுயாதீன மதிப்பீட்டாளர்களை ஈடுபடுத்துவது ஒரு சிறந்த யோசனை; நாங்களும் அதையே பின்பற்றவுள்ளோம். இது குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் பகிர்ந்துகொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.இதேபோல், டாரியோவின் கருத்து சரியானது என்று எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.செய்யறிவு குறித்து மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா கூறுகையில், செய்யறிவின் வளர்ச்சியானது மனிதகுலத்துக்கு உதவும் வகையிலும், மனிதனின் கட்டுப்பாட்டின் கீழும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.சில நாள்களுக்கு முன்னதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து வெளியேறிய தொழில்நுட்ப வல்லுநர் ஜேக்கப் காக்ஸன், செய்யறிவு நிறுவனங்கள் உருவாக்கி வரும் ’சூப்பர்இன்டெலிஜென்ஸால்’ 2030-க்குள் மனிதகுலமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.தற்போது உலகின் முன்னணி செய்யறிவு நிறுவனங்களின் தலைவர்களே, செய்யறிவால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக விவாதம் நடத்தி வருவது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. AI growth must be curbed! Anthropic CEO calls for it; X and OpenAI agree!