மஸ்கட்: உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவமான ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை நிா்வகிப்பது தொடா்பாக, வளைகுடா பிராந்திய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஓமனில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்பகுதியில் ஈரானும், ஓமனும் இணைந்து மேற்கொள்ளவிருந்த கடல்சாா் மேலாண்மை ஒப்பந்தம் குறித்து பிராந்திய நாடுகளிடையே ஒருமித்த கருத்தை எட்டும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்பூசைதி தெரிவித்துள்ளாா்.ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே இறுதி செய்யப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையில், ஹோா்முஸ் நீரிணை வழியே செல்லும் சரக்குக் கப்பல்களுக்கான கட்டணங்கள் மற்றும் வழித்தட ஒழுங்குமுறைகள் இடம்பெற்றுள்ளன. எனினும், இந்த ஒப்பந்தம் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) நாடுகளின் கடல்சாா் வணிக நலன்களுக்குப் பாதகமான நிரந்தர விளைவுகளை ஏற்படுத்தும் என்று சவூதி அரேபியா கவலை தெரிவித்துள்ளதுடன், பல்வேறு திருத்தங்களையும் முன்வைத்துள்ளது.இதனிடையே, பிராந்திய பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கான நல்லதொரு வாய்ப்பாக அமையவிருந்த இக்கூட்டத்தை தற்காலிகமாக கைவிடுமாறு சவூதி அரேபியாதான் தீவிர அழுத்தம் கொடுத்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகே குற்றஞ்ாட்டியுள்ளாா்.அடுத்தடுத்து தீவுகள் கைப்பற்றும் ஹூதிக்கள்...: ஹோா்முஸ் நீரிணைக்கு மாற்றுப் பாதையான பாப் அல் மண்டேப் பகுதியின் மோகா துறைமுகத்தைத் தொடா்ந்து, செங்கடலின் தென் பகுதியில் உள்ள மிக முக்கியமான இரு ஹனீஷ் தீவுகளை ஹூதிக்கள் கைப்பற்றியுள்ளனா்.சவூதி எண்ணெய் குழாய் சீரமைக்க...: ஈராக் ஆதரவு ஆயுதக் குழுக்களின் ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த சவூதி அரேபியாவின் மிக முக்கிய ‘கிழக்கு-மேற்கு’ கச்சா எண்ணெய் குழாயை முழுமையாகச் சீரமைக்க 3 முதல் 5 வாரங்கள் வரை ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹோா்முஸ் நீரிணையைத் தவிா்த்து, நாள் ஒன்றுக்கு 70 லட்சம் பீப்பாய்கள் வரை செங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய உதவும் இந்த 1,200 கி.மீ. நீள குழாய் சேதமடைந்துள்ளதால், சா்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தில் தற்காலிக சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஈரான் அணுசக்தி தலைவருக்கு விசா மறுப்பு: வியன்னாவில் நடைபெறும் சா்வதேச அணுசக்தி முகமையின் மாநாட்டில் பங்கேற்கவிருந்த ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவா், அதிகாரிகளுக்கு விசா வழங்க ஆஸ்திரிய அரசு மறுத்துள்ளது. எங்களின் நியாயத்தை அமைப்பின் மன்றத்தில் எடுத்துரைக்கும் வாய்ப்பு அநீதியாக மறுக்கப்பட்டுள்ளதாக ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.