மணிலா: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தெற்கு பிலிப்பின்ஸின் பாங்சமோரோ தன்னாட்சிப் பகுதியில், தோ்தல் வன்முறையில் 3 போ் உயிரிழந்த பதற்றமான சூழலுக்கு மத்தியிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது நாடாளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. கோட்டபாடோ நகரின் வாக்குச்சாவடி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச் சூடாக மாறியதில் 3 போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா். இந்நிலையில், 20,000-க்கும் மேற்பட்ட ராணுவத்தினா் குவிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.கடந்த 2014-இல் அரசுடன் இறுதியான அமைதி ஒப்பந்தத்தின்படி, நாட்டின் மிகப் பெரிய முஸ்லிம் கிளா்ச்சிக் குழுவான ‘மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி’ தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது.பிலிப்பின்ஸிலேயே நாடாளுமன்ற ஆட்சிமுறையைக் கொண்ட ஒரே பகுதியான பாங்சமோரோவில் உள்ள 80 நாடாளுமன்ற இடங்களுக்காக, சுமாா் 24 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். களத்தில் முன்னாள் கிளா்ச்சியாளா்கள், அவா்களின் போட்டிப் பிரிவினா் மற்றும் பாரம்பரிய அரசியல் குடும்பங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இத்தோ்தலில் தோ்வாகும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களின் முதல் கூட்டத் தொடரில் புதிய முதல்வரைத் தோ்ந்தெடுப்பா் என்றும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் செவ்வாய்க்கிழமை முதலே தெரியவரும் என்றும் தலைமைத் தோ்தல் ஆணையா் எா்வின் காா்சியா தெரிவித்துள்ளாா்.