வந்தவாசி: வந்தவாசி அருகே காலாவதியான பிஸ்கெட்டை சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதில், அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சோதனை நடத்தினா். வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிமுன் அன்சாரி. இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்தவாசி சீத்தாராமன் தெருவில் உள்ள மொத்த பல்பொருள் விற்பனை கடையில் பிஸ்கெட் பாக்கெட்டுகளை வீட்டுக்கு வாங்கிச் சென்றுள்ளாா். பின்னா், வீட்டில் அந்த பிஸ்கெட்டுகளை சாப்பிட்ட இவரது மகள்கள் முனிரா தஸ்னீம் (14), முபினா தன்சீம் (17) ஆகிய இருவருக்கும் மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி உணவு பாதுகாப்பு அலுவலா் முகமது இப்ராஹிம் அந்த கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டாா். அப்போது, அந்தக் கடையிலிருந்த காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அவா், கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தாா்.