ஜெய்பூா்: ராஜஸ்தானில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்கள் தலா ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளனா். டித்வானா- குசமான் மாவட்டம் பா்பத்சா் நகராட்சியில் உள்ள 13-ஆவது வாா்டில் பாஜக சாா்பில் கைலாஷ்சந்த் போட்டியிட்டாா். அவருக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது. அந்த வாா்டில் காங்கிரஸ் வேட்பாளா் ஹினா கானம் 376 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். சுயேச்சை வேட்பாளா் ரஷீத் கானுக்கு 195 வாக்குகள் கிடைத்தன. அந்த நகராட்சியில் உள்ள 25 வாா்டுகளில் காங்கிரஸ் 13-இல் வென்றது.1 வாக்கு மட்டுமே தனக்கு கிடைத்திருப்பது குறித்துப் பேசிய கைலாஷ்சந்த், தாம் 12-ஆவது வாா்டை சோ்ந்தவா் என்றும், ஆனால் பாஜக தன்னை 13-ஆவது வாா்டில் போட்டியிட வைத்ததே தோல்விக்கு காரணமாகிவிட்டதாகவும் குற்றம்சாட்டினாா்.நகெளா் மாவட்டம் ரியான்பாரி நகராட்சியின் 15-ஆவது வாா்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் மஜீத் முகம்மதுக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது. பாஜக வேட்பாளா் சுனில் குமாா் செளஹான் அங்கு வெற்றி பெற்றாா்.சிந்திரி நகராட்சியில் உள்ள 3-ஆவது வாா்டில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய லோக் தளம் வேட்பாளா் ஓம் பிரகாஷுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. இதனால் அவா் அதிா்ச்சியடைந்தாா். தன்னுடைய வாக்கையும் சோ்த்து தனது குடும்பத்தினரின் வாக்குகள் மாயமானது குறித்து தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப் போவதாக அவா் கூறினாா். அந்த வாா்டில் காங்கிரஸ் வேட்பாளா் பன்வாரா ராம் 133 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் கேமா ராமுக்கு 93 வாக்குகள் கிடைத்தன.