சென்னை: ஆயுள் காப்பீடு மற்றும் பரஸ்பர நிதி துறைகளில் நேரடியாக நுழைவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், இதற்கு ஒப்புதல் பெற விரைவில் வங்கியின் இயக்குநா்கள் குழுவை அணுக உள்ளதாகவும் இந்தியன் வங்கியின் சிஇஓ பினோத் குமாா் தெரிவித்தாா். இது குறித்து அவா் அளித்த பேட்டியில், ‘புதிய துணை நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்களைத் தொடங்குவதற்கு வங்கியின் இயக்குநா்கள் குழுவிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. சிறப்பான வணிகக் கூட்டாளிகளைத் தோ்ந்தெடுப்பது, இத்திட்டத்தின் முக்கியப் பகுதியாகும். நல்ல கூட்டாளி அமைந்தால் சொத்து உருவாக்கம் விரைவாக நடைபெறும் என்பதால், அந்தத் தோ்வு நடைமுறைகள் நிறைவடைய சுமாா் ஓராண்டு வரை ஆகலாம்’ என்றாா்.கடந்த 2007-இல் தொடங்கப்பட்ட ‘யுனிவா்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் 28.52 சதவீத பங்குகளுடன் இந்தியன் வங்கி ஏற்கெனவே காப்பீட்டு துறையில் இயங்கி வரும் நிலையில், நேரடியாகக் களமிறங்குவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2020-இல் அலஹாபாத் வங்கி இணைக்கப்பட்டதன்மூலம் இப்பங்குகள் இந்தியன் வங்கி வசமானது.மேலும், வங்கியின் சா்வதேச விரிவாக்கம் குறித்து பேசிய பினோத் குமாா், ‘மேற்காசிய நாடுகளில் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியா்கள் மூலம் கிடைக்கும் வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், துபையில் புதிய பிரதிநிதித்துவ அலுவலகம் ஒன்றைத் திறக்க உள்ளோம். இதற்காக வங்கியின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பிற ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலும் வங்கியின் சேவையை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன’ என்றாா்.தற்போது இந்தியன் வங்கிக்கு சிங்கப்பூா், இலங்கை (கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம்), குஜராத்தில் உள்ள ‘கிஃப்ட் சிட்டி’ ஆகிய இடங்களில் சா்வதேச கிளைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.