அந்தமான் - நிகோபார் தீவுகளின் 14-வது துணைநிலை ஆளுநராக தினேஷ் சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஸ்ரீ விஜய புரத்தில் உள்ள 'லோக் நிவாஸ் இல்லத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரவீந்திர விட்டல்ராவ் குகே, தினேஷ் சர்மாவுக்குப் பதவி மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.விழாவின்போது தலைமைச் செயலாளர் ஞானேஷ் பாரதி நியமன ஆணையை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் மூத்த அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வணிகச் சமூகத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.தினேஷ் சர்மா தனது மனைவி ஜெய் லட்சுமி சர்மாவுடன் செப்டம்பர் 13ல் புது தில்லியிலிருந்து அந்தமான் தீவுக்கு வருகை தந்தார்.உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வராகவும், லக்னௌவின் மேயராகவும் இருந்த சர்மா, லக்னௌ பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் உயர்கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பொறுப்பு வகித்தவர். பாஜகவைச் சேர்ந்த இவர், 2023-ல் உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக தினேஷ் சர்மாவை நியமிப்பதாக ஆளுநர் மாளிகை செப்டம்பர் 5 அன்று அறிவித்தது.அக்டோபர் 8, 2017 முதல் துணைநிலை ஆளுநராகப் பணியாற்றிய அட்மிரல் டி.கே. ஜோஷிக்கு (ஓய்வு) பதிலாக இவர் பொறுப்பேற்றுள்ளார்.