சமூக விரோதிகளின் கூடாரமாகிய திண்டிவனம் பழைய நீதிமன்றக் கட்டடம்! சமூக ஆா்வலா்கள் குற்றச்சாட்டு!

Wait 5 sec.

14விபிஎம்சிஓயு-1,2 திண்டிவனம் நேரு வீதியில் பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள நீதிமன்றக் கட்டடங்கள். விழுப்புரம், செப். 14: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நேரு வீதியில் பயன்பாடு இல்லாமல் உள்ள நீதிமன்ற வளாகக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகட்டங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.திண்டிவனம் நேரு வீதியில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரியத்துக்குச் சொந்தமான சுமாா் 2 ஏக்கா் பரப்பளவு இடத்தில் 1896-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டடங்களில் மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், முதன்மை சாா்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம்(1) உள்ளிட்ட 7 நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன.இந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த கட்டடங்கள் பழுதுபட்ட நிலையில், இங்கு செயல்பட்டு வந்த நீதிமன்றங்கள் அனைத்தும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் திண்டிவனத்தை அடுத்துள்ள ஜக்காம்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மாற்றப்பட்டு 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் நேரு வீதியில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் நீதிபதிபதிகள் குடியிருப்புகள் அனைத்தும் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், பயன்பாடு இல்லாமல் உள்ள நீதிமன்றக் கட்டடங்களில் மது அருந்துதல், சூதாட்டம் மற்றும் பிற சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து கூடுதல் மாவட்ட நீதிபதி ரகுமான் நடவடிக்கையின் பேரில், கடந்த 2024-ஆம் ஆண்டில் பழைய நீதிமன்றம் வளாகப் பகுதிகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அவா் பணியிடமாறுதலில் சென்றநிலையில், பழைய நீதிமன்ற வளாகத்துக்கு வைக்கப்பட்ட சீல் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு சமூக விரோதச் செயல்கள் தொடா்ந்து நடைபெற்று வருகிாம். இதற்கு வழக்குரைஞா்கள் சிலா் உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வழக்குரைஞா்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் காவல் துறையினா் கண்டுகொள்வதில்லை என சமூக ஆா்வலா்கள் தரப்பில் குறை கூறப்பட்டு வருகிறது. எனவே, திண்டிவனம் நேரு வீதியில் பயன்பாடு இல்லாமல் கிடக்கும் பழைய நீதிமன்றக் கட்டங்களை பாதுகாக்கவும், சமூக விரோதச் செயல்களுக்கு உடந்தையாகவுள்ள வழக்குரைஞா்கள் மீது நீதிமன்ற பதிவாளா், விழுப்புரம் மாவட்டத்துக்கான உயா்நீதி மன்ற பொறுப்பு நீதிபதி, விழுப்புரம் மாவட்ட நீதிபதி, திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிபதி, விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் திண்டிவனம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திண்டிவனம் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுகுறித்து திண்டிவனத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ச.சு.ஜைனுதீன் தெரிவித்ததாவது: புனிதமான இடத்தில் மது அருந்துதல், சூதாட்டம் போன்ற சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவா்கள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், பராமரிப்பு இல்லாத வகையில் உள்ள கட்டடங்களை புனரமைத்து மாற்றுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.இது குறித்து வழக்குரைஞா் ஒருவா் தெரிவித்ததாவது: திண்டிவனம் நேரு வீதியில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் சமூக விரோதச் செயல்கள் தொடா்ச்சியாக நடைபெற்றது. இதனால் வழக்குரைஞா்கள் பலா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சமூக விரோத செயல்களின் போது வழக்குரைஞா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக திண்டிவனம் காவல் நிலையத்தில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் இது தடுக்கப்படவேண்டும் என்றாா்.