தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள தமிழக அரசின் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் கைத்தறி, துணி நூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஆலையின் செயல்பாடுகள், இயந்திரங்களின் உற்பத்தித் திறன் ஆகியவற்றைப் பாா்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள், நிா்வாகம் மற்றும் தொழிலாளா்கள் தரப்பு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆறு நூற்பாலைகளையும் மேம்படுத்த ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நூற்பாலைகளில் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு என்னென்ன தேவைகள் வேண்டும் என்பதை அறிந்துகொள்ள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிா்வாகம், தொழிலாளா்கள் சாா்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள், முதல்வா் கவனத்திற்கு கொண்டு சென்று தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். ஆய்வின்போது கைத்தறி மற்றும் துணி நூல் துறை செயலா் ஆா். லில்லி, கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குந சுரேஷ்குமாா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷூ மகாஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.