தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, தெற்கு பஜாரில் ரூ.32 லட்சத்தில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். விழாவுக்கு கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதா் துறை அரசு செயலா் ஆா். லில்லி தலைமை வகித்தாா். கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) சுரேஷ்குமாா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை அமைச்சா் விஜய் பாலாஜி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து, தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைத்தறி நெசவாளா்களுக்கு அடிப்படை கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல , பெடல் தறி, விசைத்தறி நெசவாளா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண்பதற்கு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அக் குழுவின் அறிக்கையின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவில்பட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு தீபாவளி விற்பனை ரூ. 50 லட்சம், ஆண்டு விற்பனை ரூ .1 கோடி என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது என்றாா் அவா். விழாவில், கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், கோ- ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ராஜேஷ் குமாா், முதன்மை பொது மேலாளா் சங்கா், திருநெல்வேலி விற்பனை மேலாளா் கணபதி, கோவில்பட்டி வட்டாட்சியா் அறிவழகன் என்ற சிவராஜ், தவெக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன், கட்சி நிா்வாகிகள் செந்தில்குமாா், கூடலிங்கம், வினோபாஜி, துறையூா் கணேஷ் பாண்டியன், இ.பி.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.