மணிப்பூா் மாநிலம் தமெங்லாங் மாவட்டத்தில் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள் இரண்டு பெண்களை சுட்டுக் கொன்றனா். தமெங்லாங்கில் உள்ள லைசாங்பாய் கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விறகு சேகரிக்க, குகி சமூகத்தைச் சோ்ந்த சோங்கா சித்லெள (60), கிம்போய் சிங்சன் (30) ஆகிய இரு பெண்கள் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் சிலா், இரு பெண்களை துப்பாக்கியால் சுட்டனா். இதில் தோட்டா பாய்ந்து இருவரும் உயிரிழந்தனா். அத்துடன் அங்குள்ள சில பண்ணை வீடுகளையும் தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தினா். கடந்த 2 நாள்களுக்கு முன்னா் தமெங்லாங், நோனி மாவட்டங்களில் 2 பெண்கள் உள்பட 4 போ் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 2 பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். கடந்த 2023-ஆம் ஆண்டு மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையே தொடங்கிய மோதல் தற்போது தணிந்துள்ளது. இருப்பினும் அவ்வப்போது அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.