இந்த வாரம் கலாரசிகன் - 20-09-2026

Wait 5 sec.

இன்று மாலை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், இலக்கிய வீதி அமைப்பின் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'இலக்கிய வீதி' அமைப்பின் அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்கிறேன். அதில் கலந்து கொள்வதைப் பெருமையாக மட்டுமல்ல, கடமையாகவும் கருதுகிறேன்.அரை நூற்றாண்டுக்கு முன்பு, ஒரு கவிஞர், தன்னைப் போன்ற படைப்பாளிகளைப் பாராட்டவும், அவர்களது படைப்புகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஓர் அமைப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியும் வந்தார் என்பது அளப்பரிய சாதனையல்லாமல் வேறென்ன? இப்போது தனது தந்தை தொடங்கி, நடத்திய அமைப்பை தொய்வில்லாமல் அவரது மகள் வாசுகி பத்ரிநாராயணன் நடத்தி வருகிறார் என்பது அதைவிடப் பாராட்டுக்குரிய செயல்பாடு.பறவைகள் சரணாலயமான செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கலை அடுத்த விநாயகநல்லூர் என்கிற கிராமத்தில் பிறந்து வளர்ந்த 'லட்சுமிபதி', நாடறிந்த எழுத்தாளராக வளர்ந்ததுடன் நின்றுவிடவில்லை. ஊரறிந்த எழுத்தாளர்களுக்கு அடையாளம் கொடுக்கும் சரணாலயமாகவும் வளர்ந்த வரலாறு ஆச்சரியமானது. பள்ளி மாணவராக இருக்கும்போது சிறுகதைகள் எழுதத் தொடங்கி, இனியவன் என்கிற புனைபெயரில் முன்னணி பருவ இதழ்களில் முத்திரைக் கதைகள் எழுதும் எழுத்தாளராக வளர்ந்தார் 'லட்சுமிபதி'.தான் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் 'குழந்தைக் கவிஞர்' அழ. வள்ளியப்பாவின் விருப்பத்திற்கிணங்க அவர் நடத்திய 'குழந்தை இலக்கிய கருத்தரங்குகளும், எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணனின் வேண்டுகோளுக்கிணங்க மதுராந்தகத்தில் ஒருங்கிணைந்த செங்கை மாவட்டத் தமிழ் எழுத்தாளர் மாநாடும், இனியவன் என்கிற எழுத்தாளரை அனைவருக்கும் இனியவரான எழுத்தாளராக மட்டுமல்ல, அவர்களை விழா எடுத்து உற்சாகப்படுத்தும் புரவலராகவும் மாற்றியது.'இலக்கிய வீதியில் பேசாமல் என் ஜென்மம் சாபல்யம் அடையாது' என்று எழுத்தாளர் சுஜாதா சொன்னார் என்றால், அந்த அமைப்பு எத்தகைய தகுதி பெற்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இலக்கியத்துடன் நின்று விடாமல், தெருக்கூத்து, பொம்மலாட்டம், வில்லுப் பாட்டு, நாட்டுப்புற கலை, ஓவியம் என்று இலக்கிய வீதி செய்திருக்கும் பங்களிப்பு விசாலமானது.1977 முதல் இயங்கிவரும் இந்த அமைப்பு குறித்தும், எழுத்தாளர் இனியவன் குறித்தும் எனது இனிய நண்பர் ராணி மைந்தன் எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்று நூலை படித்தபோதுதான் முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.'இனியவன்' இட்ட பாதையில் சற்றும் மனம் தளராமல் பயணிக்கும் 'இலக்கிய வீதி' இப்போது தனது பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதற்கு வாழ்த்துகள்! பாரதி பாஸ்கர் விடுக்கும் ஒரு வேண்டுகோள். மதுரை மாநகராட்சி 58-ஆவது வார்டு அரசரடி ஞானஒளிவுபுரம் பகுதியில் அமைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா வாழ்ந்த விசுவாசபுரி நான்காவது தெருவுக்கு, அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். அதனுடன் சேர்ந்து நான் வைக்கும் ஒரு வேண்டுகோள்- மதுரை மாவட்டத் தலைமை நூலகத்துக்கு எங்கள் பேராசிரியர் சாலமன் பாப்பையா பெயரைச் சூட்ட வேண்டும்.அரசு நூலகத்துக்கு அந்தந்தப் பகுதியில் வாழ்ந்து மறைந்த கவிஞர்கள், இலக்கிய ஆளுமைகள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் பெயரைச் சூட்டுவதும் அவர்களது பிறந்த நாளில் நிகழ்ச்சி நடத்துவதும், அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட ஏதுவாக இருக்கும், அரசு எங்கள் வேண்டுகோளைப் பரிசீலிக்கக் கேட்டுக்கொள்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நாளான கடந்த வியாழக்கிழமை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்கத்தில் மகாகவி பாரதியார் குறித்துப் பேச அழைத்திருந்தார்கள். அதற்கு நான் தேர்ந்தெடுத்த தலைப்பு-'பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்!''உங்களது சிறந்த பேச்சுக்கு எனது அன்பளிப்பு' என்று வழக்குரைஞர் கு. சாமிதுரை எனக்குத் தந்த புத்தகம் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் 'பூங்காவில் கொய்த பூக்கள்'. இதுதான் அநேகமாகக் கடைசியாக வெளிவந்த அவரது புத்தகமாக இருக்கக்கூடும்.இதில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகளில் பல 1980 தொடக்கத்தில் அல்லது அதற்கு முன்பு பேராசிரியர் சாலமன் பாப்பையா திருச்சி வானொலி நிலையத்தில் பல்வேறு இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகள்.அவரது வானொலி உரைகளின் தொகுப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளநிலை வகுப்புகளுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அதனுடன், வேறு பல கட்டுரைகளையும் இணைத்து அவர் 'பூங்காவில் கொய்த பூக்கள்' என்று இலக்கிய ஆரம் தொடுத்திருக்கிறார். பேராசிரியர் மிகச் சிறந்த தமிழ் இலக்கியப் புலமை வாய்ந்தவர் என்பதை உலகுக்குப் பறைசாற்றும் கட்டுரைகளை உள்ளடக்கியது இந்தத் தொகுப்பு.'தமிழும் இறையியலும்' என்கிற முதல் கட்டுரையில் தொடங்கி மதுரைக் காஞ்சி, சிலம்பு, கம்ப காதை, பிரபந்தம் என்று சங்க இலக்கியம், சமய இலக்கியம், காப்பியங்கள் என்று அவரது கட்டுரைகள் நகர்கின்றன. இவையெல்லாம் வானொலி உரைகளின் கட்டுரை வடிவங்கள்.அடுத்ததாக, 'சிரிப்புலகப் பெரும் பேராசிரியர்' என்று 'கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனில் தொடங்கி, வள்ளலார், வேதநாயகம் பிள்ளை, வ.வே.சு. ஐயர், பாரதி, பாரதிதாசன் என்று பல இலக்கிய ஆளுமைகள் குறித்த தனிக்கட்டுரைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.இந்தத் தொகுப்பில் இடம்பெறும் 20 கட்டுரைகளும், பேராசிரியர் சாலமன் பாப்பையாவுடன் அவரது உரையைக் கேட்டபடி பயணிக்கும் அனுபவத்தை வழங்குகின்றன. மதுரையில் இருந்து வெள்ளியன்று பொள்ளாச்சிக்கு 'அமிர்தா' ரயிலில் பயணித்தபோது, நான் ரயிலில் ஏறியதுதான் தெரியும்.புத்தகத்தைப் படித்து முடித்தபோது பொள்ளாச்சி ரயில் நிலையம் வந்திருந்தது.விமர்சனத்துக்கு வரும் சில கவிதைத் தொகுப்புகள் பார்வையில் படுவதில்லை. அதனால், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கவிதைத் தொகுப்புகளை அவ்வப்போது புரட்டிப் படிக்க முற்படுகிறேன். அப்படி இந்தவாரம் கண்ணில் பட்டது கடந்த ஜனவரி மாதம் வெளியான கவிஞர் அ. கார்த்திகேயனின் 'மாபெரும் ஒற்றை மலர்' என்கிற கவிதைத் தொகுப்பு. அதில் இடம் பெற்றிருக்கிறது 'மாற்றம்' என்கிற ரசனை மிகுந்த கவிதை.சற்று முன்பு பார்த்தஅதே கானகம்தான்குயிலொன்று கூவியவுடன்மாறி விட்டிருக்கிறது...