அரக்கோணம் ரயில் நிலையம்அருகே போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சிறப்புப்பிரிவு காவல் துறையினருடன் இணைந்து அரக்கோணம் நகர போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மும்பையில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு ரயிலில் வந்திறங்கியவா்களை கண்காணித்துக் கொண்டிருந்தனா். அப்போது ரயில் நிலைய மேற்கு பகுதியில் அவசர அவசரமாக பேருந்து நிலையம் நோக்கி சென்ற 3 இளைஞா்களை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் வைத்திருந்த பையில் 606 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், சென்னை அயனாவரத்தை சோ்ந்த சுபாஷ் மெல்வின்(22), தணிகைபோளூரைச் சோ்ந்த இளங்கோவன்(26), சரவணன்(22) ஆகியோரை கைது செய்தனா். இவா்கள் போதை மாத்திரைகளை மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் நகரில் வாங்கியதாகவும், சென்னைக்கு எடுத்துச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.