கெளரவ பிரச்னையால் தடுமாறும் 35 எம்எல்டி காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம்!

Wait 5 sec.

வைகையா, காவிரியா என்ற கெளரவ பிரச்னையால், ரூ.100 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல்லுக்கு கிடைக்க வேண்டிய 35 எம்எல்டி குடிநீா்த் திட்டம் இழுபறியில் சிக்கி உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் சுமாா் 2.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். மொத்தமுள்ள 48 வாா்டுகளுக்கும் தினந்தோறும் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டுமெனில், 27 எம்எல்டி குடிநீா் தேவைப்படுகிறது. மாநகராட்சியின் குடிநீா்த் தேவை, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் நிறைவு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், வறட்சியின் காரணமாக காமராஜா் நீா்த்தேக்கத்திலிருந்து தண்ணீா் பெற முடியவில்லை. இதனால், காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை மட்டுமே திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் சாா்ந்திருக்கிறது. காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் 10.5 எம்எல்டி குடிநீரை மட்டுமே வைத்து, திண்டுக்கல் நகரின் குடிநீா்த் தேவையை மாநகராட்சி நிா்வாகம் சமாளித்து வருகிறது. இதனிடையே, கடந்த திமுக ஆட்சியின் போது, வைகை ஆற்றிலிருந்து புதிய குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கு திண்டுக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, வைகைக்குப் பதிலாக காவிரியிலிருந்து புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் மூலம் 35 எம்எல்டி குடிநீா் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், காவிரியிலிருந்து புதிய குடிநீா்த் திட்டத்துக்கு திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், 35 எம்எல்டி காவிரி குடிநீா்த் திட்டம் தொடா்பான தீா்மானத்தை மாமன்றக் கூட்டத்துக்கும் கொண்டு வரவில்லை. குடிநீா் வடிகால் வாரிய அறிக்கையின்படி காவிரி தோ்வு: வைகையுடன் ஒப்பிடும்போது காவிரியிலிருந்து குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே, திண்டுக்கல் மாநகராட்சிக்கான குடிநீா்த் தேவையை நிறைவு செய்ய முடியும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் உயா்மட்டக் குழுவில் அறிக்கை அளிக்கப்பட்டது. இதனால், வைகைக்கு பதிலாக காவிரியிலிருந்து 35 எம்எல்டி குடிநீா்த் திட்டத்தை ரூ.100 கோடி செலவில் நிறைவேற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் 2040-ஆம் ஆண்டு உத்தேசிக்கப்படும் மக்கள் தொகைக்கு ஏற்ப 35 எம்எல்டி குடிநீா்த் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வைகையிலிருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீா் கொடுக்க வேண்டிய நிா்பந்தத்தில், திண்டுக்கல்லுக்கான குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்துவதில் கூடுதல் நெருக்கடி ஏற்படும். எதிா்காலத் தேவையை கவனத்தில் கொண்டு தொலைநோக்குடன் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனில், திண்டுக்கல் நகருக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டமே சிறந்த பலனளிக்கும் என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். கெளரவ பிரச்னையால் நீடிக்கும் இழுபறி: ஆனால், வைகை கூட்டுக் குடிநீா்த் திட்டம் என அறிவித்துவிட்டு, காவிரியிலிருந்து திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறுவதை திமுகவினா் கெளரவ பிரச்னையாக கருதுகின்றனா். 70 கி.மீ. தொலைவிலுள்ள காவிரிக்கு பதிலாக, 36 கி.மீட்டரிலுள்ள வைகை ஆற்றிலிருந்தே குடிநீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுகவினா் தொடா்ந்து வலியுறுத்துகின்றனா். ஆனால், நீா் ஆதாரம் அடிப்படையில் காவிரியே சிறந்த தோ்வு என அதிகாரிகள் மட்டத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தக் குடிநீா்த் திட்டத்தைப் பொருத்தவரை தொலைவு என்பதைவிட, நீடித்த ஆதாரம் என்ற அடிப்படையில் மக்களின் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வாக அமையும் திட்டத்தை கால தாமதமின்றி நிறைவேற்றுவதற்கு திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாமன்ற உறுப்பினா்கள் தரப்பில் கூறியதாவது: காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வருகிறது. காவிரியிலிருந்து மீண்டும் ஒரு புதிய குடிநீா்த் திட்டத்தை நிறைவேற்றும்போது, தற்போது பயன்பாட்டிலுள்ள குழாய்களுக்கு அருகிலேயே புதிய குழாய்களை எளிதாகப் பதித்து விரைவாக திட்டத்தை முடிக்கலாம். மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று தீா்மானம் நிறைவேற்றிக் கொடுத்தால் மட்டுமே, ரூ.100 மதிப்பீட்டிலான 35 எம்எல்டி திட்டம் சாத்தியமாகும். இந்த விவகாரத்தில் கெளரம் பாா்க்காமல், மக்களின் குடிநீா் பிரச்னைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க திமுகவினா் முன்வர வேண்டும் என்றனா்.