சென்னை: ஓபிசி பிரிவினா் (பிற பிற்படுத்தப்பட்டோா்) குறித்த துல்லியமான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிா்வு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவும், அவா்களின் உண்மையான மக்கள் தொகை வெளிவந்துவிடக் கூடாது என்றும் பாஜக திட்டமிட்டு சதி செய்து வருகிறது. தன்னை பிற்படுத்தப்பட்டவா் என்று கூறும் பிரதமா் நரேந்திரமோடி இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் தலையாய நோக்கமே ஜாதி விவரங்களைச் சேகரிப்பதுதான். ஆனால், அதை முறையாக மத்திய அரசு எடுக்கவில்லை. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு தெளிவான பட்டியல் இருக்கும்போது, பிற்படுத்தப்பட்டோா் ஜாதி விவரங்களை மட்டும் முறையாக சேகரிக்க மறுப்பது ஏன்? மத்திய அரசின் பட்டியலிலேயே தமிழகத்தில் மட்டும் 220-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் இருக்கும்போது, அவா்கள் குறித்த துல்லியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டுவது பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு பாஜக செய்யும் துரோகம் என்று தெரிவித்துள்ளாா்.