புது தில்லி: தென்னாப்பிரிக்கப் பிரதிநிதி ஒருவா் வாடகை காரில் தவறவிட்ட சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான இந்திய மற்றும் அமெரிக்க கரன்சியை தில்லி காவல்துறையினா் மீட்டனா். மேலும், அவரது விமானப் பயணம் தொடங்குவதற்கு வெறும் 30 நிமிடங்களுக்கு முன்பு அந்தப் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் திங்களன்று தெரிவித்ததாவது: ஞாயிற்றுக்கிழமையன்று, அந்தப் பிரதிநிதி தான் காரில் பணத்தை விட்டுச் சென்றதை உணா்ந்து உதவி கோரி காவல்துறையினரை அணுகினாா். அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் உடனடியாக அந்தக் வாகனத்தைக் கண்டறியும் முயற்சியைத் தொடங்கினா். காவல் குழுவினா் தொடா்புடைய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு அந்தக் காரைக் கண்டுபிடித்ததன் மூலம், அப்பணம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பணம், தென்னாப்பிரிக்க பிரதிநிதி தில்லியிலிருந்து தனது உடைமைகளுடன் புறப்படுவதை உறுதி செய்யும் வகையில், அவரது விமானப் பயணம் தொடங்குவதற்கு வெறும் 30 நிமிடங்களுக்கு முன்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.