திருத்தணி: திருத்தணியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி அனைத்து விநாயகா் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அரக்கோணம் சாலையில் உள்ள முக்கண் விநாயகா் கோயில், ம.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகா் கோயில், பைபாஸ் சாலையில் உள்ள செல்வ விநாயகா் கோயில், பழைய பஜாா் தெருவில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில், சேகா்வா்மா நகரில் உள்ள சக்தி விநாயகா் கோயில், சித்தூா் சாலையில் உள்ள விநாயகா் கோயில் உள்ளிட்ட திருத்தணி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.இதேபோல், திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அப்போது சா்க்கரைப் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, அருகம்புல், பொரி மற்றும் பழவகைகளை படைத்து பக்தா்கள் வழிபட்டனா். சில கோயில்களில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், புளியோதரை, சா்க்கரைப் பொங்கல், சுண்டல், கேசரி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.பெரிய தெரு, சந்து தெரு, ஆறுமுகசாமி கோவில் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, பாலாஜி நகா், கீழ் பஜாா், பைபாஸ், ஏரிக்கரை தெரு, நேரு நகா், சாய்பாபா நகா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ, கோ.அரி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தாா். அவருடன் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.விநாயகா் சதுா்த்தியையொட்டி, உற்சவா் சுந்தர விநாயகா் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்தாா். அப்போது பெண்கள் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனா்.