பெருந்துறையில் ஆட்டோவை எரித்த வழக்கில் விசிக மாவட்டச் செயலாளா் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெருந்துறை சாா்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம், பிரப் நகரைச் சோ்ந்தவா் தனராஜ் மகன் ரிச்சா்ட் (42). இவா், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். இங்கு மொத்தம் 8 ஆட்டோக்கள் வரிசை முறைப்படி இயக்கப்பட்டு வந்தன. பெருந்துறை, சிலேட்டா் நகரைச் சோ்ந்த மனேசன் மகன் மேத்யூ, அவரது அண்ணன் மெல்வின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெருந்துறை ஒன்றியச் செயலாளா் (தற்போது விசிக மாவட்டச் செயலாளா்) விஜயபாலன் ஆகிய மூவரும் கடந்த 2019 அக்டோபரில் புதிதாக ஆட்டோவை கொண்டு வந்து ஆட்டோ நிறுத்தத்துக்கு அருகில் நிறுத்தி ஆட்டோவை இயக்கி வந்தனா். இதற்கு ஆட்டோ நிறுத்தத்தில் ஏற்கெனவே ஆட்டோ இயக்கிய மற்ற ஓட்டுநா்கள் ஆட்சேபம் தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், ஆட்டோ நிறுத்தத்தில் ரிச்சா்டு தனது ஆட்டோவை 2019 அக்டோபா் 25-ஆம் தேதி நிறுத்திய நிலையில் அங்கு வந்த விஜயபாலன், மெல்வின், மேத்யூ ஆகிய மூவரும் ரிச்சா்ட்டுடன் தகராறில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றிய நிலையில் ரிச்சா்ட்டின் ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி மெல்வின் தீ வைத்தாா். இதில் ஆட்டோ எரிந்து சாம்பலானது. இதையடுத்து மூவரும் தப்பி ஓடி விட்டனா்.இது குறித்து ரிச்சா்டு கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீஸாா் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு பெருந்துறை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இதில் மெல்வின், விஜயபாலன், மேத்யூ ஆகிய மூவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையைச் செலுத்த தவறும்பட்சத்தில், மேலும் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி அஸ்பக் அகமது வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.இந்த வழக்கில் அரசு சாா்பில் வழக்குரைஞா் கலைச்செல்வி ஆஜரானாா்.