கணேஷோத்சவம் மற்றும் துா்கா பூஜை கொண்டாட்டங்களை முன்னிட்டு, உள்ளூா் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட இடங்களைத் தவிர, தேசிய தலைநகரில் உள்ள யமுனா மற்றும் பிற நீா்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு தில்லி மாசுக் கட்டுப்பாட்டு தடை விதித்துள்ளது. 1974 ஆம் ஆண்டின் நீா் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் பிரிவு 33ஏ-இன் கீழ் செப்டம்பா் 9 அன்று வெளியிடப்பட்ட தில்லி மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், சிலை தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் இயற்கை களிமண், மக்கும் பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன.பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் அடிப்படையிலான சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு கூறியுள்ளது. மேலும், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கிணறுகள் போன்ற நீா்நிலைகளில் சிலைகளைக் கரைப்பது ஒரு பாரம்பரியமாக இருந்து வரும் கணேஷோத்சவம் மற்றும் துா்கா பூஜை கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அது வலியுறுத்தியுள்ளது.