பி.வி. சிந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் இளம் இந்தியப் பெண், தான் ஒரு ராக்கெட்டை உருவாக்க விரும்புவதாகக் கூறியிருந்தால், அதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். இஸ்ரோவில் பணியாற்ற வேண்டும் என்பதல்ல; தானே ஒரு ராக்கெட்டை உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவு. அப்போது, அந்த அறையே அமைதியாகியிருக்கும். மேலும், அவரைப் போன்ற ஒருவரால் இதைச் சாதிக்க முடியாது என்று அக்கறையுடன் ஒருவர் எடுத்துரைத்திருப்பார். விண்வெளித் துறை என்பது அரசுக்கே உரியது, இது போன்ற வானுயர்ந்த கனவுகள் பிற நாடுகளுக்கே உரியவை என்ற மனப்பான்மையும் நிலவியது. ஓர் இந்திய தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ராக்கெட் கடந்த ஜூலை 18-ஆம் தேதி விண்வெளியின் சுற்றுப்பாதையை அடைந்தது. பாதுகாப்பான பணியைத் துறந்து, சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தக் கனவை நனவாக்க முனைந்த இளம் பொறியாளர்களால் நிறுவப்பட்ட ஸ்கைரூட் நிறுவனம் இந்த ராக்கெட்டை உருவாக்கியது. இதன்மூலம், தனியார் நிறுவனங்களும் விண்வெளியை அடையக்கூடிய திறன் பெற்றுள்ள உலகின் மூன்று நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, சீனாவுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.ஒரு காலத்தில் 'முடியாது' என்று மறுக்கப்பட்ட அந்தப் பெண், இப்போது 'தான் எலான் மஸ்க் ஆக விரும்புகிறேன்' என்று கூறும்போது, அது வெறும் வேடிக்கையான பேச்சாக அல்லாமல், ஒரு திட்டமாகவே அமைகிறது. அவர் தனது கனவை நோக்கிப் பயணத்தைத் தொடங்கலாம்.அந்த பத்து ஆண்டுகளில் திறமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தியாவில் திறமைகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை; மாறியது பதில் மட்டுமே. நமது வரலாற்றின் பெரும்பாலான காலத்தில், இந்தியாவில் ஒரு மிகப் பெரிய கனவுக்கான பதில், 'உங்களால் முடியாது' என்பதாகவே இருந்தது. அதற்குக் காரணம், உங்களுக்குப் போதிய திறமை இல்லை என்பதல்ல; மாறாக, அந்த வாய்ப்புக்கான கதவே இருந்ததில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அதிகம் பேசப்படாத, மிகப் பெரிய சாதனையாக விளங்குவது, அந்தப் பதில் 'ஏன் முடியாது?' என்று மாறியிருப்பதே ஆகும்.பல பத்தாண்டுகளாக, இந்தியாவில் புதிய முயற்சிகளுக்கான ஆர்வம், அனுமதிகளின் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்தத் தடையை ஆராய்ந்து அது உண்மையில் என்னவோ அதை அப்படியே புரிந்துகொண்டதே பிரதமர் மோடியின் உண்மையான நுண்ணறிவாக இருந்தது. அரசு நடைமுறை, 'அனுமதிக்கப்படாவிட்டால் தடை' என்பதிலிருந்து 'தடை செய்யப்படாவிட்டால் அனுமதி' என்ற நிலைக்கு மாற வேண்டும் என்று இந்த மாற்றத்தை அவர் ஒரே வரியில் சுருக்கினார்.முதலில், 2020-இல் விண்வெளித் துறை திறக்கப்பட்டது. 60 ஆண்டுகளாக அரசின் பிரத்யேக கட்டுப்பாட்டில் இருந்த இந்தத் துறை, ராக்கெட்டை ஏவுவதற்கான திறன் கொண்ட அனைவரின் பங்களிப்புக்கும் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர், நமது வயல்களுக்கு மேலுள்ள வான்வெளியும் திறக்கப்பட்டது.ஒரு ட்ரோனை இயக்குவதற்குக்கூட ஒருகாலத்தில் ஏராளமான படிவங்களையும் அனுமதிகளையும் கோரிய விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டன. இதனால், இன்று ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த இளைஞர்கூட ட்ரோனை உருவாக்கி, அறிதிறன்பேசி மூலம் பதிவு செய்து, தொழில் தொடங்க முடிகிறது. இதே ட்ரோன்கள்தான், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களின் கைகளிலும் தவழ்கின்றன. இதன்மூலம், எதிர்காலத் தொழில்நுட்பம் அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கான வருமானமாக மாற்றப்பட்டுள்ளது.2021-இல் புவிசார் வரைபடத் தரவுகள் தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இதன்மூலம், தாங்கள் ஏற்கெனவே வாழ்ந்துவரும் நாட்டைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள, இந்திய நிறுவனங்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லாத நிலை உருவானது.2023-இல் ஒரே சட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதிமீறல்களுக்கான குற்றவியல் தண்டனைகள் நீக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஆவணங்கள் மற்றும் நடைமுறை சார்ந்த இணக்கப்பாடுகளுடன் தொடர்புடையவையாகும். இதன்மூலம், உரிய ஆவணத்தைத் தாக்கல் செய்யத் தவறியதற்காக ஒருவர் சிறைத் தண்டனை பெறும் நிலை நீக்கப்பட்டது.2014-இல் விண்வெளித் துறையில் கிட்டத்தட்ட ஒரு புத்தொழில் நிறுவனம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது இந்தியாவில் சுமார் 440 புத்தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. இதேபோல், ட்ரோன் துறையில் முன்னர் புத்தொழில் நிறுவனங்களே இல்லாத நிலை இருந்தது; தற்போது எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்துள்ளது.2016-இல் 'ஸ்டார்ட்அப் இந்தியா' திட்டம் தொடங்கப்பட்டபோது, நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 350-ஆக இருந்தது.இன்று, இந்த எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இவை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. மேலும், இந்த நிறுவனங்கள் பெங்களூரு அல்லது தில்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமன்றி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறு நகரங்களிலும் உருவாகியுள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன.முந்தைய முறையில் முதலில் புறக்கணிக்கப்பட்டவர்களை இலக்காகக் கொண்டே இந்தக் கடன்கள் திட்டமிட்டு வழங்கப்பட்டன. குறிப்பாக, தலித் மற்றும் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில் தொடங்குநருக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும், இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத கோடிக்கணக்கான இந்தியர்களும் நிதி அமைப்புமுறைக்குள் கொண்டுவரப்பட்டனர்; இதன்மூலம் வங்கிச் சேவைக்கான வழியாக அறிதிறன்பேசி மாறியது.இளைஞர்களுக்குக் கல்வி கற்பிக்கும் முறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தேசிய கல்விக் கொள்கை மூலம், 16 வயதில் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கும் பாடப் பிரிவே அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை ஒன்றாகப் படிக்க அனுமதிக்கப்படாத பல்வேறு பாடப் பிரிவுகளை மாணவர்கள் இணைத்துப் படிக்க முடியும்.ஒரு பட்டப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, பின்னர் மீண்டும் தொடரும்போது, ஆரம்பத்திலிருந்து படிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலேயே தங்களது வளாகங்களை அமைக்கத் தொடங்கியுள்ளதால், உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெறுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலையும் தற்போது இல்லை.விண்வெளி, குறைகடத்தி தொழில்நுட்பம், மென்பொருள், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பதன் மூலம், நமது திறமையான இளைஞர்கள் உள்நாட்டிலேயே தங்கிப் பணியாற்றுவதற்கும், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கும் இந்தத் தலைமைத்துவம் வழிவகை செய்துள்ளது.ஒரு தலைமுறைக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டாலும், தங்களைக் கவனிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் யாரும் இல்லை என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படலாம். இந்திய இளைஞர்களை நிர்வகிக்கப்பட வேண்டிய பிரச்னையாகவோ, வாக்கு வங்கியாகவோ பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் கருதியதில்லை. தேர்வுகளுக்கு முன்பாக மாணவர்களுடன் கலந்துரையாடும்போது, அச்சம், மன அழுத்தம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு குறித்து அவர் எளிமையாகப் பேசுகிறார். அதிகாரத்தில் இருப்பவர் தனது குடிமக்களுக்கு அறிவுரை வழங்குவது போல அல்லாமல், இளமைக் காலத்தின் அச்சத்தையும் கனவுகளையும் ஒரே நேரத்தில் அனுபவித்த ஒருவராக அவர்களுடன் உரையாடுகிறார். பிரதமர் மோடி இளைஞர்களைத் தனக்கு சமமானவர்களாகக் கருதுகிறார். அவர்களுடன் உரையாடும்போது அவர்களைத் தாழ்வாகக் கருதுவதுமில்லை; அவர்களின் குரலைப் புறக்கணிப்பதுமில்லை. கடினமான சூழல்கள் எழும்போது, அவற்றை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்கிறார். எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதைத் தனது செயல்பாடுகள் மூலம் இளைஞர்களுக்கு உணர்த்துகிறார்.ஒவ்வொரு தலைமுறையும் தான் தேர்ந்தெடுக்காத வரம்புகளை மரபாகப் பெறுகிறது. நமது தாத்தா, பாட்டியின் தலைமுறை பற்றாக்குறையை எதிர்கொண்டது. தங்களைவிட மேல்நிலையில் இருப்பவரின் அனுமதி கிடைக்கும் வரை நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலையை நமது பெற்றோர் எதிர்கொண்டனர். நாம் அதிலிருந்து மாறுபட்ட ஒன்றைப் பெற்றுள்ளோம்; நம்மால் இந்த நாட்டை உருவாக்க முடியும் என்று நாடு நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்.இதுதான் இந்தத் தலைமையின் உண்மையான அளவுகோல். ஓர் இந்திய இளைஞர் எத்தகைய கனவுகளைக் காண முடியும் என்பதில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் இதன் உண்மையான அளவுகோல்; ஒரு திட்டமோ புள்ளிவிவரமோ அல்ல. ஒருகாலத்தில் தங்களுக்கான வாய்ப்புகளுக்கு சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டவர்களால் உருவாக்கப்பட்ட அந்த ராக்கெட்தான் ஜூலை மாதத்தில் விண்வெளியை அடைந்தது. அத்தகைய வாய்ப்புகளுக்கான கதவு இப்போது திறக்கப்பட்டுள்ளது.இதுபோல, மேலும் ஆயிரக்கணக்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இனி ஓர் இளம் இந்தியரிடம் அவர் கனவு காண அனுமதிக்கப்படுகிறாரா என்பதைக் கேட்க வேண்டியதில்லை. அவர் எவ்வளவு தொலைவு முன்னேற விரும்புகிறார் என்றுதான் கேட்க வேண்டும்.