மாசுபடும் ஆறுகள்

Wait 5 sec.

திருநெல்வேலி மாவட்டம், தாமிரவருணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றுக்கு உரிமை கோரும் ஒருவரின் மனு மீதான விசாரணையின்போது, தாமிரவருணி ஆற்றின் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இறந்தவர்களின் ஆடைகள் உள்ளிட்ட உடைமைகளை தாமிரவருணியில் வீசுவதற்கு தடை விதித்துள்ளது.மேலும், தினமும் சுமார் ஒரு டன் எடையுள்ள ஆடைகள் தாமிரவருணி ஆற்றில் வீசப்படுவதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் பொதுமக்களால் தாமிரவருணி ஆறு மாசடையாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.நாட்டின் சுற்றுச் சூழலை குறிப்பாக, ஆறுகளை மதச்சடங்குகள் என்ற பெயரில் மாசடையச் செய்வது நெடுங்காலம் தொட்டு நடைபெற்று வருகிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆறுகளில் கலக்க விடும் தொழிற்சாலைகளுக்கு சற்றும் குறையாத வகையில், மக்கள் மதச் சடங்குகள் மூலம் ஆறுகளை மாசுபடுத்தி வருகின்றனர்.அடர்ந்த காடுகளில் விலங்குகளைப்போல் சுற்றித் திரிந்த மனிதன் நாகரிக உலகில் அடியெடுத்து வைப்பதற்கு ஆற்றங்கரைகளே அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பது மிகையல்ல. கி.மு. 4,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட யூப்ரடீஸ், டைகிரிஸ் ஆற்றங்கரையில் தோன்றிய சுமேரிய நாகரிகம், கி.மு. 3300 ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளி நாகரிகம், நைல் நதிக் கரையின் எகிப்து நாகரிகம் என உலகின் பல்வேறு பழைமையான நாகரிகங்கள் அனைத்தும் ஆற்றங்கரைகளில்தான் தோன்றின. எனவேதான், ஆற்றங்கரைகளை நாகரிகங்களின் தொட்டில் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.நம் நாட்டின் புனிதமான ஆறு எனக் கருதப்படும் கங்கை கரையில், இறந்து போனவர்களின் சடலங்களை எரித்து, அவை அரைகுறையாக எரிந்த நிலையிலேயே கங்கை நதியில் தள்ளி விடுவது பன்னெடுங்காலமாக நடைபெறும் சமயம் சார்ந்த சடங்காக இருந்துள்ளது. இது போன்ற மக்களின் உணர்வுபூர்வமான சடங்குகளால் கங்கை மாசாவதை முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை.கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கங்கை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 60 கோடி பேர் விட்டுச் சென்ற கழிவுகளின் எடை 30 ஆயிரம் டன் ஆகும்.உத்தரகண்ட் மாநிலத்தில், கங்கை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஹரித்துவாருக்கு இந்த ஆண்டு ஷ்ராவண மாதத்தில் கங்கை நீரை எடுக்க சென்ற சுமார் 5 கோடி பக்தர்களால் விட்டுச் செல்லப்பட்ட உடைகள், நெகிழிப் பொருள்களின் கழிவுகள் எடை சுமார் 7,000 டன் ஆகும். கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரி நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்ட மண்டலமாகும். எனினும், இங்கு வந்த சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் நெகிழி மற்றும் உபயோகிப்படுத்தப்பட்ட துணிக் கழிவுகளை ஆங்காங்கே வீசிச் சென்றுள்ளனர்.கர்நாடக மாநிலத்தின் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காவிரி ஆற்றில் கலந்ததன் விளைவாக அண்மையில் மேட்டூர் அணையின் ஒரு பகுதி நீர் பச்சை நிறமாகக் காட்சியளித்து ஊடகங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடையச் செய்தது.ஆறுகள் மட்டுமின்றி கடற்கரைகளையும் சமயம் சார்ந்த சடங்குகள் பெயரால் மாசுபடுத்துவது என்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி தம் முன்னோருக்கு தர்ப்பணம் தரும் சடங்குகள் முடிந்த நிலையில், கைவிடப்பட்ட பெருமளவிலான கழிவுப் பொருள்களால் கடற்கரையின் சூழல் பெருமளவில் மாசடைந்தது குறிப்பிடத்தக்கது.மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆறுகள் மாசடைந்து வருவதைத் தடுக்க மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய அரசால் 2014-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட "நமாமி கங்கை' திட்டத்தின்படி கங்கையைத் தூய்மைப்படுத்த இதுவரை ரூ. 42,500 கோடி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டு வருகிறது.கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், வைகை ஆற்றின் பராமரிப்புக்காக மட்டும் ரூ. 79,000 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான டெண்டர்களும் விடப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு நிதிநிலை அறிக்கையில் வைகை, காவிரி, தாமிரவருணி ஆகிய 3 ஆறுகளின் பராமரிப்புக்காக ரூ. 53 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது. சென்னையில் உள்ள அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் புனரமைப்புக்காக மத்திய அரசு ரூ. 7,500 கோடி ஒப்புதல் அளித்துள்ளது.நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம்,1974, நீர் (மாசு தடுப்பு கட்டுப்பாடு) மேல் வரி சட்டம் 1977, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 எனப் பல்வேறு சட்டங்கள் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் தூய்மை, பராமரிப்புக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும், சமயம் சார்ந்த திருவிழாக்கள், சடங்குகள், தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவற்றால் ஆறுகள் மாசுபடுவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை.இன்றைய மனிதகுலத்தின் வாழ்வு மட்டுமன்றி, நாளைய தலைமுறையின் வாழ்வும் செழிக்க ஆறுகளின், தூய்மையைப் பராமரிப்பது மிக அவசியம் என நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து, அதற்கான நமது பங்களிப்பைச் செலுத்த முன்வர வேண்டும்.