கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கில், அக். 29-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென் மண்டலப் பிரிவு கெடுவிதித்து எச்சரித்துள்ளது. முந்தைய திமுக ஆட்சியில், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, வங்கக் கடலில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சுழல் அனுமதியை எதிா்த்து நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த வெண்ணிலா தாயுமானவன், சென்னையைச் சோ்ந்த மீனவா் பாரதி, திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் உள்ளிட்டோா் தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு தீா்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினா் புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குத் தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2022-ஆம் ஆண்டே அரசுக்கு உத்தரவிட்டும், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாமல், அவகாசம் மட்டுமே வாங்கி வருவதாக தீா்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது. புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய தீா்ப்பாயம், வரும் அக். 29-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து, விசாரணையை ஒத்திவைத்தது.