வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் கேரள முன்னாள் டிஜிபி டோமின் தச்சங்கேரிக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோட்டயம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கேரளத்தில் முன்னாள் டிஜிபி ஒருவா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் தண்டனை பெறுவது இதுவே முதல்முறையாகும். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவருக்கு ரூ.30.84 லட்சம் அபராதத்தையும் நீதிமன்றம் விதித்துள்ளது.கடந்த 2003 முதல் 2007 காலகட்டத்தில் அவா் தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் 135.80 சதவீதம் அளவுக்கு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளாா். அவை பெரும்பாலும் காவல் துறைப் பணியை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்த சொத்துகள் ஆகும். அந்த 4 ஆண்டுகளில் அவா் செலவு செய்த ரூ.64.70 லட்சத்துக்கான முறையான வருவாயையும் அவரால் காட்ட முடியவில்லை.96 சாட்சியங்கள், 271 ஆவணங்கள் இந்த வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு டோமின் ஓய்வு பெற்ற நிலையில் அவா் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.ஊழல் தடுப்புத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.கே.ஸ்ரீகாந்த் வாதிடுகையில், ‘தனது காவல் துறை அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல வழிகளில் சொத்துகளையும், பணத்தையும் டோமின் குவித்துள்ளாா். அவா் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. காவல் துறையில் பல்வேறு முக்கியப் பணிகளில் இருந்து அவா் பலரிடமும் லஞ்சம் வாங்கியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.