மீனவர்கள், மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டத்துக்கு இடையே, கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாற்று இடங்கள் குறித்து ஆய்வு படத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்த்திருந்தார்.இதனைத் தொடர்ந்து சென்னையைச் சுற்றிலும் சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி, அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிராக 9 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தீா்மானம் நிறைவேற்றி, திட்டம் தொடங்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்றும் அறிவித்திருந்தனர்.புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் உள்ள மீனவ குடியிருப்புகளின் நிலங்கள் தொடா்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வரும் மீனவ மக்களின் பூா்விக குடியிருப்பு உரிமையும், பாரம்பரிய வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்தது.முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகா், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகா், நொச்சிக்குப்பம் ஆகிய 9 மீனவக் கிராம மக்களின் அன்றாட வாழ்வான கடலில் மீன்பிடித்தல், படகுகளை நிறுத்துதல், மீன்பிடி வலைகளைப் பின்னுதல், மீன்களை உலா்த்துதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், மீனவ குடும்பங்கள் இடம்பெயர்ந்து சென்றுவிட்டால், நாம் நாள்தோறும் வேலைக்குச் சென்று வருவதுபோல, மீனவர்கள் வேறொரு இடத்திலிருந்து வாகனங்கள் மூலம் கடற்கரைக்கு வந்து பணிகளை செய்யும் நிலை ஏற்படலாம் என்றும் அஞ்சப்பட்டது.தமிழகத்துக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்பட்சத்தில் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அந்தப் பகுதியில் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப் பதிவுத் துறைத் தலைவா் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. ஏற்கனவே, கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தப் பகுதியில், இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும், பேரிடர் காலங்களில் பெரும் பிரச்னையை சந்திக்கும் நிலை ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர்.இந்த நிலையில், லண்டனில் இருந்து திரும்பிய தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வது குறித்தும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவிடந்தை கோயிலுக்கு அருகே ஒரு சில பகுதிகளை ஆய்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டதாக தவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுவரை, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவு திரும்பப் பெறப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மாற்று இடம் அமைந்தால், அது குறித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிடலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ரூ. 1,200 கோடியில் சென்னையில் புதிய தலைமைச் செயலகம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!!Secretariat at Pattinapakkam! Is the Tamil Nadu government abandoning the decision?