ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சோ்க்க, இந்தியா 14.5 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்கள் எடுத்தது. 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை தன் வசமாக்கியது. முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. அணியின் பிளேயிங் லெவனில், காயமடைந்த ஸ்பின்னா் வருண் சக்கரவா்த்திக்கு பதிலாக, ரவி பிஷ்னோய் சோ்க்கப்பட்டாா். ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்தாா். ரஷீத் கான் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, டாஸ்விஷ் ரசூலி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 26 ரன்கள் சோ்த்தனா். முகமது நபி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20, செதிகுல்லா அடல் 12, குல்பதின் நயிப் 10, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 11 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். ஓவா்கள் முடிவில், நூா் அகமது 7, முஜீப் உா் ரஹ்மான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் நிதீஷ்குமாா் ரெட்டி 3, அா்ஷ்தீப் சிங் 2, ஜஸ்பிரீத் பும்ரா, அக்ஸா் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். பின்னா் 160 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணியில், சஞ்சு சாம்சன் - அபிஷேக் சா்மா கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. அபிஷேக் 19 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 39, சாம்சன் 22 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 57 ரன்களுக்கு விடைபெற்றனா். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இஷான் கிஷண் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38, திலக் வா்மா 15 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலா்களில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.