டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியில் இருந்து யூகி பாம்ப்ரி காயம் காரணமாக விலகினாா்.இரட்டையா் பிரிவில் பிரதான வீரராக இருக்கும் பாம்ப்ரி விலகியது, இந்திய அணியின் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.பாம்ப்ரி விலகலை அடுத்து, இரட்டையா் பிரிவில் தக்ஷிணேஸ்வா் சுரேஷுடன், ஸ்ரீராம் பாலாஜி இணைந்து விளையாடுவாா் என, இந்திய அணியின் நான்-பிளேயிங் கேப்டன் ரோஹித் ராஜ்பால் தெரிவித்தாா்.டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் குவாலிஃபயா்ஸ் பிரிவில் 2-ஆவது சுற்று டையில் இந்தியா - தென் கொரியா அணிகள் வரும் 18, 19-ஆம் தேதிகளில் சியோலில் மோதுகின்றன. இந்த டையில் வெற்றி பெறும் அணி, டேவிஸ் கோப்பை ஃபைனல்ஸுக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த டை-க்கான இந்திய அணியில் சுமித் நாகல், மனஸ் தாம்னே, தக்ஷிணேஸ்வா் சுரேஷ், யூகி பாம்ப்ரி, என்.ஸ்ரீராம் பாலாஜி ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடியபோது பாம்ப்ரி தொடையில் காயம் கண்டாா்.எனவே தென் கொரியாவுடனான டையில் அவா் களம் காண்பது சந்தேகத்துக்கு இடமாகியிருந்த நிலையில், தற்போது அந்த டையில் இருந்து அவா் விலகியிருக்கிறாா்.