தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருப்பது விவாதப்பொருளாக மாறியிருக்கும் நிலையில், கிரகநிலைகளை சரி செய்ய ஜோதிடர் அறிவுறுத்தியதன்பேரில், லண்டன் பயணம் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.ஏற்கெனவே ஜோதிடரின் ஆலோசனைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது வெளியான தகவலை அப்படியே பொய் என புறந்தள்ளிவிட முடியாத நிலை உள்ளது.தமிழக முதல்வர் ஜோசப் விஜய் லண்டன் பயணம் செல்வதாக அறிவிக்கப்பட்டது முதல், இன்று வரை சமூக ஊடகங்களில் அது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்க்க, தொழில் துறை அமைச்சர் செல்லாதது ஏன்? விளையாட்டுத் துறை அமைச்சர் உடன் சென்றது ஏன்? தமிழ்நாட்டில் ஏற்கனவே முதலீடுகளை செய்து வரும் உ.பி.யில் உள்ள தொழில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள லண்டன் சென்றது ஏன்? என பலவாறு கேள்விகள் எழுந்துகொண்டுதானிருக்கின்றன.ஆனால், இத்தனை கேள்விகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாய், ஜோதிட ஆலோசனையின் அடிப்படையில் கிரக நிலைகளைச் சரிசெய்யவே, இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் ஜோதிடர் ஆலோசனை பேரிலேயே லண்டன் சென்றிருப்பதாக யாராலும் உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் ஒருவரால் முடியும். அவர்தான் முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட். ஒருவேளை, அவர் ஏதேனும் ஊடகங்களில் தோன்றி, எந்தவிதமான கிரகநிலை மாற்றம், வெளிநாடு சென்றால் அது பரிகாரமாக அமையுமா? என்பதை தெளிவுபடுத்தினால் மட்டுமே உறுதி செய்ய முடியும். அதுவரை அது உறுதியற்ற தகவல்தான். தகவல் என்றுகூட சொல்ல முடியாது. புரளி அல்லது ஊகம் எனலாம்.முதல்வர் விஜய்யின் அரசியல் வாழ்வு தொடங்கும்முன்பே, ஜோதிட ஆலோசனை பெற்று வருவதாகக் கூறப்படும் தகவல்கள் பொதுவெளியில் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதானிருக்கின்றன. இது ஒன்றும் புதிதல்ல. திரைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் விஜய், அரசியல் கட்சித் தொடங்கி இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதன் பின்புலத்தில் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் இருப்பதை பல முறைகளில் விஜய் - ஜோதிடர் இருவருமே ஒப்புக்கொள்ளும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். பொது வெளியிலும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பேசியிருக்கிறார்.விஜய் ஜாதகம் ஒரு சுனாமி போன்ற ஜாதகம் என தான் கணித்ததாகவும், இன்னும் பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டு, முதல்வருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தார்.தற்போது, முதல்வர் விஜய் லண்டன் சென்றிருப்பது குறித்து ஆராயும் சில ஜோதிடர்கள், இது கிரக நிலைகள் சரியில்லாததால், ஒரு பரிகாரமாகவே அவர் வெளிநாடு சென்றிருக்கலாம் என கணித்திருப்பதால், நிச்சயம் இது ரிக்கி ரத்தன் பண்டிட் ஆலோசனையாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.அதற்கேற்பு, முன்காலத்தில், ஜோதிடத்தில் ஜாதக நிலைகள் சரியில்லையென்றால் கடல்தாண்டி செல்லும் நிலை ஏற்படும் என்று வெளிநாடு செல்வது குறித்து சொல்வதும் வழக்கத்தில் இருந்துள்ளதையும் சுமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டுகிறார்கள்.முதல்வர் விஜய் பொறுப்பேற்றதும், முதல்வரின் சிறப்புப் பணி அதிகாரியாகவும் ஜோதிடர் நியமிக்கப்பட்டார். இந்த நடவடிக்கை கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதால், தமிழக அரசு, 36 மணி நேரத்திற்குள் ரத்தன் பண்டிட் நியமனத்தை ரத்து செய்தது. இதுபோன்ற பல்வேறு சம்பவங்களால்தான், ஜோதிடர் ஆலோசனையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளன. Tamilnadu CM Vijay in London on Astrologers Advice?