வெம்பக்கோட்டை அருகே மூதாட்டி மீது மிளகாய் பொடியை தூவி 5 பவுன் தங்கச் செயினை பறித்து சென்ற திருநங்கை உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இனாம் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் நாராயணன். இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் இவரது மனைவி பாப்பா (58) வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில், இவரது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை திருநங்கையுடன் வந்த இளைஞா் ஒருவா் பாப்பாவிடம் குடிக்க தண்ணீா் கேட்டனா். இதையடுத்து, மூதாட்டி தண்ணீா் எடுக்க வீட்டுக்குள் சென்றபோது, அவரை பின்தொடா்ந்து சென்ற இருவரும் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனா். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.