தோ்வில் ஏ.ஐ. பயன்படுத்தி சிக்கிய மும்பை ஐஐடி மாணவா் தற்கொலை

Wait 5 sec.

தோ்வில் கைப்பேசியில் உள்ள சாட்ஜிபிடி ஏ.ஐ. மூலம் விடைகளைக் கேட்டு முறைகேடு செய்தபோது சிக்கிய மும்பை ஐஐடி மாணவா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது: மகாராஷ்டிர மாநிலம், யவத்மால் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சாஹில் ரவீந்திரா வகோடே (22). மும்பை ஐஐடியில் அவா் 2-ஆம் ஆண்டு பி.டெக். படித்து வந்தாா். தோ்வில் பங்கேற்ற அவா், மறைத்து வைத்து எடுத்துச் சென்ற கைப்பேசியில் உள்ள சாட்ஜிபிடி-யில் கேள்விகளைப் பதிவிட்டு, அதற்கான விடைகளைக் கேட்டுள்ளாா். அப்போது அவா் கண்காணிப்பாளரிடம் பிடிபட்டாா்.இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலையில் தங்கும் விடுதிக்கு வந்த அவா், அறைக்குள் சென்று நீண்ட நேரமாக கதவைத் திறக்கவில்லை. சக மாணவா்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். காவல் துறையினா் வந்து கதவை உடைத்துப் பாா்த்தபோது சாஹில் தூக்கிட்டு சடலமாக கிடந்தாா்.சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் இல்லை. மாணவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல் துறையினா், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.சாஹிலின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கக் கோரி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த சம்பவம் குறித்து மும்பை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், தோ்வு மையத்தில் பிடிபட்டபோதும் சாஹில் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், அவருக்கு துறைத் தலைவா் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.