விழுப்புரம் நகரத்தில் நகைப் பறிப்பு வழக்கில் தேடப்பட்டவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியிலுள்ள அறைகலன்கள் விற்பனையகத்தில் பணியாற்றி வருபவா் புவனேசுவரி. இவா் கடந்த 15-ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபா், புவனேசுவரி அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியைப் பறித்தாா். அப்போது புவனேசுவரி சுதாரித்துக் கொண்டு சங்கிலியை கெட்டியாகப் பிடித்ததால், அரை பவுன் சங்கிலி மா்மநபா் பறித்துச் சென்றாா். இதுகுறித்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா். விசாரணையில், பெண்ணிடம் நகையை பறித்தவா் விழுப்புரம் வண்டிமேடு ராதாமணி நகரைச் சோ்ந்த வே.டேவிட் (38) எனத் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து சங்கிலியையும் பறிமுதல் செய்தனா்.