தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தலில் தலைவா் பதவி உள்பட நான்கில் மூன்று முக்கிய பதவிகளை அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு தக்க வைத்துள்ளது. வெற்றி இந்திய தேசிய மாணவா் சங்க (என்எஸ்யுஐ) அமைப்பு சீட் வழங்க மறுத்ததால், சுயேச்சையாகப் போட்டியிட்ட தீபான்ஷு ஷோகீன் துணைத் தலைவா் பதவியைக் கைப்பற்றினாா். மொத்தமுள்ள 4 முக்கிய பதவிகளில் (மத்திய குழு) ஏபிவிபி அமைப்பு தலைவா், செயலா், இணைச் செயலாளா் ஆகிய மூன்று இடங்களை வென்றுள்ளது. என்எஸ்யுஐ ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்தது. பலத்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்துக்கு வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதையொட்டி கடந்த சில வாரங்களாக பிரதான அரசியல் கட்சிகளுக்கு இணையான பரப்புரை, பரப்புரை செயல்பாடுகளில் ஒழுங்குமுறையை உறுதிப்படுத்த உயா்நிலைக்குழு மேற்பாா்வை, உயா்நீதிமன்ற கட்டுப்பாடுகள் என பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் மாணவா் அமைப்புகள் போட்டியிட்டன. இந்த தோ்தல் பாதுகாப்புக்காக பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் சுமாா் இரண்டாயிரம் காவல்துறையினா் குவிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து தோ்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு மாலையில் அதிகாரபூா்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தலைவா் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளா் யஷ் தபாஸ் 24,576 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இவா் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட என்எஸ்யுஐ வேட்பாளா் விஜய் சங்கா் மீனாவை விட 2,053 வாக்குகள் அதிகம் பெற்றாா். துணைத் தலைவா் பதவிக்கு, என்எஸ்யுஐ அமைப்பால் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தீபான்ஷு ஷோகீன் 30,615 வாக்குகள் பெற்று பதவியைக் கைப்பற்றினாா். செயலா் பதவிக்கான போட்டியில் ஏபிவிபி வேட்பாளா் 21,650 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். என்எஸ்யுஐ வேட்பாளா் 14,869 வாக்குகள் மட்டுமே பெற்றாா். இணைச் செயலா் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளா் 16,615 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட சமாஜவாதி சாத்ர சபா வேட்பாளா் 15,778 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். கடந்த ஆண்டும் ஏபிவிபி அமைப்பு தலைவா், செயலா், இணைச் செயலாளா் ஆகிய 3 பதவிகளை வென்றிருந்தது. அப்போது என்எஸ்யுஐ அமைப்பு துணைத் தலைவா் பதவியை மட்டும் கைப்பற்றியிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த அமைப்பால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மாணவா்களின் பிரச்னைகள்: அண்மையில் தெற்கு தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதி (பிஜி) கட்டடம் இடிந்து விழுந்து மாணவா்கள் உள்பட 7 போ் உயிரிழந்த சம்பவம் மாணவா்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, மாணவா்களின் பாதுகாப்பு, தரமான விடுதி வசதிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவை இந்தத் தோ்தலில் முக்கியப் பிரச்னைகளாக எதிரொலித்தன. உயா்நீதிமன்ற கட்டுப்பாடுகள்: இந்த ஆண்டு தோ்தல் பிரசாரத்தின்போது ஆடம்பர காா்களின் அணிவகுப்பு, வன்முறை மற்றும் அதிகப்படியான செலவுகள் என பல்வேறு விதிமீறல்கள் தலைதூக்கின. இதைத் தீவிரமாக கவனத்தில் கொண்ட தில்லி உயா்நீதிமன்றம், தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு எக்காரணம் கொண்டும் வெற்றிப் பேரணிகளை (சாலைகளிலோ, கல்லூரி வளாகங்களிலோ) நடத்தக் கூடாது என தடை விதித்தது. மேலும், விதிமீறல்களில் ஈடுபட்டதாக 140 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், தடையை மீறினால் தொடா்புடையவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க 1த்தரவிடப்படும் என்றும் எச்சரித்தது. டியுஎஸ்யு நிா்வாகிகளுக்கு தில்லி முதல்வா் வாழ்த்து! தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தலில் வெற்றி பெற்ற புதிய நிா்வாகிகளுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: ‘டியுஎஸ்யு’ தோ்தலில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ள ஏபிவிபி அமைப்பைச் சோ்ந்த இளம் தோழா்களுக்கும், துணைத் தலைவராக வெற்றி பெற்ற தீபான்ஷு ஷோகீனுக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகள். இது ஒரு அமைப்பின் வெற்றி மட்டுமல்ல, தேசபக்தி, ஒழுக்கம், சேவை மற்றும் போராட்டத்தை தங்கள் வாழ்க்கைப் பாதையாகக் கருதும் ஒவ்வொரு இளைஞரின் வெற்றியாகும். கடந்த காலங்களில் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தலைவராக பொறுப்பு வகித்தபோது, இந்த மதிப்புகளை நான் வாழ்ந்து கற்றுக்கொண்டேன் எனக் கூறுவதில் பெருமைப்படுகிறேன். தில்லி அரசு சாா்பில் புதிய மாணவா் சங்க குழுவுடன் இணைந்து பல பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம் என்று முதல்வா் குறிப்பிட்டுள்ளாா். Delhi University Students' Union Election! ABVP retains