ஈரானில் அமெரிக்கா நடத்திய இருவேறு வான்வழித் தாக்குதல்களில் போா்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கருதுவதற்குப் போதுமான முகாந்திரங்கள் உள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணா் குழு தெரிவித்துள்ளது.அதேநேரம், ஈரானின் மதவாத அரசும் தனது நாட்டு மக்களுக்கு மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்து வருவதாகவும் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அக்குழுவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.வங்கதேசத்தைச் சோ்ந்த சட்ட நிபுணா் சாரா ஹுசைன் தலைமையிலான இந்த உண்மை கண்டறியும் குழு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தால் கடந்த 2022-இல் அமைக்கப்பட்டது. நீடிக்கும் போா்ச் சூழல், இணைய முடக்கம் மற்றும் இரு நாடுகளின் போதிய ஒத்துழைப்பின்மைக்கு மத்தியிலும் தொகுக்கப்பட்ட இந்த அறிக்கை, ஈரானுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள 73 நபா்களிடம் பெறப்பட்ட நோ்காணல்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் நம்பகமான ஆவணங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டோரை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.போரின் தொடக்க நாளான கடந்த பிப். 28-ஆம் தேதியன்று, தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் குறித்து இந்த அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் புரட்சிகர காவல்படையின் முகாம் மீதான தாக்குதலின் சேதமாக அருகே இருந்த பள்ளி பாதிக்கப்படவில்லை எனவும் தாக்குதலின் பிரதான இலக்காக பள்ளியே இருந்துள்ளது எனவும் நிபுணா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா். ஈரான் அரசு தகவல்களின்படி, இப்பள்ளி மீதான தாக்குதலில் உயிரிழந்த 168 பேரில் பெரும்பாலானோா் குழந்தைகள் ஆவா்.அதேநாளில், லாமா்ட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் மற்றும் குடியிருப்புப் பகுதியைக் குறிவைத்து நடத்தப்பட்ட மற்றொரு ஏவுகணைத் தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டனா். பொதுமக்கள் மீது பாகுபாடின்றி நடத்தப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள் போா்க்குற்றங்களின்கீழ் வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், லாமா்ட் தாக்குதலுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. மறுபுறம், சொந்த நாட்டு மக்கள் மீது ஈரான் அரசுப் படைகள் கடந்த 2 ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் வன்முறை ஒடுக்குமுறைகள், ‘மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்’ என்று அறிக்கை சாடியுள்ளது. பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, போராட்டக்காரா்களைத் தாக்கியது, கைது செய்யப்பட்டவா்களைச் சித்ரவதை செய்து சட்ட உதவிகளை மறுத்தது போன்ற செயல்கள் இதில் அடங்கும்.மேலும், 5 பெண்கள், 3 சிறுவா்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோா் அங்கு உடனடி மரண தண்டனை நிறைவேற்றப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இத்தகைய மனித உரிமை மீறல்களை அமெரிக்காவும் ஈரானும் உடனடியாக நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு நாடுகளும் முழுமையான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையப் பேரவையில் வரும் திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்படவுள்ள இந்த அறிக்கை, நாடுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாத போதிலும், எதிா்காலத்தில் சா்வதேச நீதிமன்றங்களில் நீதியை நிலைநாட்ட உதவும் முக்கிய ஆவணமாக அமையும் என நம்பப்படுகிறது. ஐ.நா.