அதிகாரத்தின் கைகளில் சாமானியன் ஒருவன் அகப்பட்டுக் கொண்டால் என்ன ஆவார்? அவருக்கான நீதி எப்படி கிடைக்கும்? என்பதே என்ன விலை திரைப்படத்தின் கதை. இயக்குநர் சஜீவ் பலூர் இயக்கத்தில் கலமையா சினி யூனிவர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் ஆகியோரின் முன்னணி கதாபாத்திரத்தில் உருவாகியுள்ளது என்ன விலை திரைப்படம். ராமேசுவரத்திற்கு வரும் பக்தர்கள் தீர்த்த கிணற்றில் வீசும் நாணயங்களை சேகரித்து வாழும் தொழிலாளியாக நடித்திருக்கிறார் கருணாஸ். எளிமையான குடும்பமானாலும் தனக்கென ஒரு அறம் தனக்கென ஒரு நேர்மை என வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஒருநாள் அவருக்கு நீருக்கடியில் இருந்து ஒரு பதக்கம் கிடைக்கிறது. அதை காவல்துறையில் அவர் ஒப்படைக்க முயல அவர் மீதே நகைகளை திருடுபவர் குற்றம்சாட்டி திருட்டு முத்திரை குத்துகிறது காவல்துறையும் அதிகார வர்க்கமும். தனக்கு முற்றிலும் தொடர்பில்லாத இந்த குற்றச்சாட்டில் இருந்து கருணாஸ் எப்படி வெளியேறினார் என்பதை பேசுகிறது என்ன விலை திரைப்படம். படம் ஆரம்பிக்கும் போது இந்தத் திரைப்படம் பெற்ற சர்வதேச விருதுகள் தொடர்பான விவரங்கள் திரையிடப்படுகின்றன. எளிய மக்களின் இயலாமையும் அதை பயன்படுத்திக் கொள்ளும் அதிகார வர்க்கத்தின் ஆணவத்தையும் வேறுபடுத்தி காட்ட முயற்சித்து இருக்கிறது என்ன விலை. மீனவப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியாக தன்னுடைய நடிப்பில் தேர்ந்த தன்மையை கொடுத்திருக்கிறார் நடிகர் கருணாஸ். அப்பாவித் தனத்திலும், தவிப்பிலும், இயலாமையிலும் அவர் கண்ணீர் வடிக்கும் இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். தான் சிறைக்கு சென்று விட்டால் தன்னுடைய குடும்பத்தின் நிலை என்னவாகும் என அவர் அச்சப்படும் இடங்களில் எல்லாம் இந்த நாட்டின் எளிய மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை கண்முன் காட்ட முயற்சித்திருக்கிறார். நிமிஷா சஜயன்முழு நீள படத்தில் அவருடைய நடிப்பு நம்பிக்கையைத் தருகிறது. கருணாசை மீட்க வரும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் நிமிஷா சஜயன். அவருடைய கதாபாத்திரம் ஜெய் பீம் சூர்யாவை நினைவுபடுத்தினாலும் அதற்குண்டான அழுத்தத்தை பிரதிபலிக்கவில்லை. அவர் எதற்காக நீண்ட நாள் நீதிமன்றம் செல்லாமல் இருந்தார் என்பதையோ, அவர் கருணாஸ் வழக்கில் நீதிமன்றம் செல்வதற்கான அழுத்தமான காரணத்தையோ இயக்குநர் காட்சிப்படுத்தவில்லை. நீதிமன்ற வளாகங்களில் நடைபெறும் வாத பிரதிவாத காட்சிகளில் நிமிஷாவின் நடிப்பு பக்குவமாக இருந்தாலும் வசனங்கள் ஒரு நாடகத் தன்மையை பிரதிபலிக்கின்றன. இவர்கள் இருவருடன் விஜயலட்சுமி, கமலேஷ், ஷாஷா சிவகுமார், பூர்ணிமா பாக்கியராஜ், ஒய்.ஜி மகேந்திரன், பிரபு, மோகன் ராமன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, கவி, கொட்டாச்சி, பாண்டி என மிகப் பெரிய பட்டாளமே நடித்துள்ளது. நீதிபதியாக வரும் நிழல்கள் ரவியின் கதாபாத்திரம் ஈர்க்கிறது. துணை கதாபாத்திரங்கள் பலவற்றிற்கும் கூடுதலான எழுத்து வேலை இல்லை என்பதால் அவர்களுடைய காட்சிகள் பெரிய அளவு அழுத்தமான இடத்தைப் பெறவில்லை. படம் ஆரம்பத்தில் மெதுவாக சென்றாலும் வழக்கிற்குள் நுழைந்த பிறகு ஒரு விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. முதல் பாதியில் வழக்கு சூடு பிடிக்கும் என எதிர்பார்த்தால் இரண்டாம் பாதியில் முன் பின் தொடர்பு இல்லாத வழக்காடும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. பல திரைப்படங்களில் நாம் பார்த்த சமூக வலைதள பிரச்சாரங்கள், போராட்டங்கள் ஆகியவை படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவு திரைக்கதைக்கு கை கொடுக்கவில்லை. கருணாஸ் எனும் ஒற்றை மனிதருக்காக ஒட்டுமொத்த மாநிலமே இணையத்தில் பேசிக் கொண்டிருப்பதெல்லாம் எதார்த்தத்தில் எடுபடுமா என்பது கேள்விக்குறி. அதிகாரத்தின் பிடியில் சிக்கிக் கொண்ட எளிய மனிதனுடைய நிலை என்னவாகும் என்பதை காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்கநர். முன் கணிக்க கூடிய காட்சிகள், விறுவிறுப்பை தராத திரைக்கதை, குழப்பமான முடிவு என பேச வந்த விஷயத்தை தாண்டி சுவாரஸ்யமற்று தேங்கி நிற்கிறது என்ன விலை. கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் பிரபுவின் வசனங்கள் படத்தின் அடிநாதமான அதிகார வர்க்கத்தின் மீதான கேள்வியையே சிதைக்கிறது.வாரம் ஒரு திரைப்படத்தின் மூலம் தன்னுடைய இசை முத்திரையை பதித்துக் கொண்டே இருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி எஸ். இந்த திரைப்படத்திலும் அவரது இசை படத்தின் கருவை சுமந்து நிற்கிறது. ஒளிப்பதிவாளர் ஆல்பியின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருக்கிறது. படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் படத்திற்கு கொஞ்சம் சுவாரசிய அம்சத்தைக் கொடுத்திருக்கலாம். முக்கியமான பிரச்னையை சொல்ல வந்து எப்படியாவது முடித்து விட தட்டு தடுமாறி தவித்து நிற்கிறது என்ன விலை திரைப்படம்.Enna vilai - Another Jai Bhim – A Film Reviewபந்தயம் அடித்ததா? நடிகர் சூரியின் மண்டாடி - திரை விமர்சனம்!