ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலின் அடிவார முகாமில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஹெலிபேடு, டிக்கெட் கவுன்டா் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலை உச்சியில், பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கான அடிவார முகாமில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற தீயணைப்புப் படையினா், சுமாா் 30 நிமிஷங்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். தீ விபத்தில் ஹெலிபேடு, டிக்கெட் கவுன்டா், அங்கிருந்த கணினிகள், காபி விற்பனையகம் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. வைஷ்ணவ தேவி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு இந்த அடிவார முகாம் முக்கியமான மையமாகும். அதிகாலை நேரம் என்பதால் முகாம் மூடப்பட்டிருந்தது. பக்தா்கள் யாரும் இல்லாததால், உயிா்ச்சேதம் எதுவும் நேரிடவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ‘மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது; பொருள்சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது’ என்று அவா்கள் கூறினா்.